விழுப்புரம் நகராட்சி முதல் பெண் தலைவராக தமிழ்செல்வி பதவி ஏற்பு
மறைமுக தேர்தலில் வெற்றி பெற்று விழுப்புரம் நகராட்சியின் முதல் பெண் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த தமிழ்செல்வி பதவி ஏற்றுக்கொண்டார். துணை தலைவராக சித்திக் அலி தேர்வு செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இந்நகராட்சியில் கடந்த மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 25 வார்டுகளிலும், அ.தி.மு.க. 7 வார்டுகளிலும், பா.ம.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலா 2 வார்டுகளிலும், மனிதநேய மக்கள் கட்சி ஒரு வார்டிலும், 3 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இதன் மூலம் அதிக வார்டுகளில் வெற்றி பெற்றதால் விழுப்புரம் நகராட்சியை பெரும்பான்மையுடன் தி.மு.க. கைப்பற்றியது. இதில் வெற்றி பெற்ற 42 கவுன்சிலர்களும் கடந்த 2-ந் தேதியன்று நகராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
நகரசபை தலைவராக தமிழ்செல்வி தேர்வு
இதனை தொடர்ந்து நகரசபை தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. அதாவது காலையில் நகரசபை தலைவருக்கான தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் நகரசபை தலைவர் பதவிக்கு 29-வது வார்டு தி.மு.க.கவுன்சிலர் தமிழ்செல்வி பிரபு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.அவரது வேட்பு மனுவை 5-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் நெடுஞ்செழியன், 38-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சிவக்குமார் ஆகிய இருவரும் முன்மொழிந்தனர். தமிழ்செல்வி பிரபுவை எதிர்த்து போட்டியிட யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதையடுத்து தமிழ்செல்வி பிரபு நகரசபை தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.அதன் பின்னர் நகரசபை தலைவர் தமிழ்செல்வி பிரபுவுக்கு நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதுவரை நடந்த தேர்தல்களில் நகராட்சி தலைவர் பதவியை ஆண்கள் மட்டுமே அலங்கரித்து வந்த நிலையில் தற்போது நடந்த தேர்தலில்தான் முதன்முதலாக நகரமன்ற தலைவர் பதவி பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது தற்போது விழுப்புரம் நகராட்சியின் முதல் பெண் தலைவர் என்ற பதவியை தமிழ்செல்வி பிரபு அலங்கரித்துள்ளார்.
துணை தலைவர் தேர்வு
இதனை தொடர்ந்து மதியம் 2.30 மணியளவில் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் 14-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சித்திக்அலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவரும் உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
புதியதாக பதவியேற்றுக்கொண்ட நகரசபை தலைவர் தமிழ்செல்வி பிரபு, துணை தலைவர் சித்திக்அலி ஆகியோருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் ஆகியோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர். அதுபோல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரசபை தலைவர் மற்றும் துணை தலைவருக்கு சக கவுன்சிலர்கள், கட்சியினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story