தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நாகராஜன் வெற்றி முறைகேடு நடந்ததாக கூறி அ.தி.மு.க.வினர் மறியல்
தக்கோலம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நாகராஜன் வெற்றி பெற்றார். முறைகேடு நடந்ததாக அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்
தக்கோலம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நாகராஜன் வெற்றி பெற்றார். முறைகேடு நடந்ததாக அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.
தி.மு.க. வெற்றி
தக்கோலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 7 இடங்களில் தி.மு.க.வும், 6 இடங்களில் அ.தி.மு.க.வும், பா.ம.க.மற்றும் சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. இதில் பா.ம.க. உறுப்பினர் அ.தி.மு.க.வில் இணைந்தார். இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் அ.தி.மு.க.வில் இணைய போவதாக கூறப்பட்டிருந்தது.
இதனால் தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தலைவருக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. சார்பில் 2-வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாகராஜனும், அ.தி.மு.க. சார்பில் 5-வது வார்டு உறுப்பினர் லாவண்யாவும் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நாகராஜன் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட லாவண்யாவுக்கு 6 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஒரு வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது.
சாலை மறியல்
இதனை சற்றும் எதிர்பார்க்காத அ.தி.மு.க.வினர் அதிருப்தியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் கலந்து கொள்ளப்போவதில்லை என கூறி புறக்கணித்தனர். இதனை தொடர்ந்து துணைத்தலைவர் தேர்தல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசன் தெரிவித்துள்ளார். தலைவருக்கான தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கோர்ட்டை அணுகப்போவதாக அ.தி.மு.க.வினர் கூறி வருகின்றனர்.
Related Tags :
Next Story