சிறுமியுடன் தாய் தெப்பத்தில் குதித்து தற்கொலை


சிறுமியுடன் தாய் தெப்பத்தில் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 5 March 2022 1:52 AM IST (Updated: 5 March 2022 1:52 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் குடும்ப பிரச்சினை காரணமாக தாயும், மகளும் நகர் மத்தியில் உள்ள தெப்பத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

விருதுநகர், 
விருதுநகரில் குடும்ப பிரச்சினை காரணமாக தாயும், மகளும் நகர் மத்தியில் உள்ள தெப்பத்தில் குதித்து தற்கொலை செய்து  கொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. 
காதல் திருமணம் 
விருதுநகர் கட்டையாபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல்ராஜன் (வயது 36). இவர் இங்குள்ள தனியார் ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (29). இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகள் கஜலட்சுமி (9). 
பழனிவேல்ராஜன் மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் சிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வந்த பின்பும், இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
தாய்-மகள் தெப்பத்தில் குதிப்பு 
இந்தநிலையில் மகாலட்சுமி நள்ளிரவில் தனது மகள் கஜலட்சுமியை அழைத்துக்கொண்டு நகரின் மையப்பகுதியில் உள்ள தெப்பத்திற்கு வந்துள்ளார். தெப்பத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு வந்துள்ள மகாலட்சுமி முதலில் மகள் கஜலட்சுமியை தெப்பத்தில் குதிக்க சொல்லியுள்ளார். ஆதலால் அந்த சிறுமி  தெப்பத்தில்குதித்துள்ளார். இதனை தொடர்ந்து மகாலட்சுமியும் தெப்பத்தில் குதித்துள்ளார். இந்த உருக்கமான காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
உடல்கள் மீட்பு 
நேற்று மாலை தெப்பத்தில் சிறுமி கஜலட்சுமியின் உடல் தண்ணீரில் மிதக்க தொடங்கியது. போலீசார் உடனடியாக கஜலட்சுமியின் உடலை மீட்டனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மகாலட்சுமி தெப்பத்தில் குதித்துள்ளது தெரியவந்ததும்  தீயணைப்பு படையினர் உதவியுடன் மகாலட்சுமியின் உடலை மீட்டனர். பின்னர் இவர்கள் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர்அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 மகாலட்சுமி நள்ளிரவில் தற்கொலை செய்ய முடிவு எடுத்தபோது அப்பகுதியில் நின்ற  ஆட்டோ டிரைவரிடம் தெப்பத்திற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதுபற்றி இந்நகர் பஜார் போலீசார், பழனிவேல்ராஜனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story