செங்கோட்டை நகரசபை தலைவர் தேர்தலில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மோதல்
செங்கோட்டை நகரசபை தலைவர் தேர்தலில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மோதிக் கொண்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை நகரசபை கூட்ட அரங்கில் தலைவா் பதவிக்கான மறைமுக தேர்தல், அலுவலா் இளவரசன் தலைமையில் நடந்தது. நகரசபை தலைவா் பதவிக்கு அ.தி.மு.க. 2-வது வார்டு உறுப்பினா் ராமலட்சுமி மற்றும் தி.மு.க. சார்பில் 6-வது வார்டு உறுப்பினா் பினாஷா ஆகியோர் போட்டியிட்டனா்.
நேற்று தேர்தல் நடந்தபோது தி.மு.க. உறுப்பினா் எஸ்.எம்.ரஹீம், சுயேச்சை உறுப்பினா் இசக்கித்துரை பாண்டியன் ஆகியோர் வாக்கு பெட்டியிலிருந்த வாக்கு சீட்டை கிழிக்க முயன்றதாகவும், மேஜை, நாற்காலிகளை தள்ளியதாகவும் கூறப்படுகிறது.
அப்போது அ.தி.மு.க. உறுப்பினா்கள் மற்றும் பா.ஜ.க. உறுப்பினா்கள் அதை தடுத்து வாக்குசீட்டை பறித்து தி.மு.க. உறுப்பினா்களிடம் வாக்குவாதம் செய்தனா். இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே மோதல், கைகலப்பு ஏற்பட்டது. இதன்பின்னர் தி.மு.க.வினர் வெளியே சென்றனா். இதனால் தேர்தல் நடத்தும் அலுவலா் இளவரசன் தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் ஆணையாளா் அலுவலகம் முன்பு அமர்ந்து தங்களை வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு வந்தார். தலைவா் பதவிக்கு அதிகமான உறுப்பினா்கள் எங்களிடம் இருக்கும்போது வெற்றி பெற்றதாக அறிவிக்காமல் நீங்கள் எப்படி தேர்தல் ரத்து செய்யலாம்? என்று வாக்குவாதம் செய்தார்.
இதன் பின்னா் தேர்தல் நடத்தும் அலுவலா் இளவரசன் அ.தி.மு.க. வேட்பாளா் ராமலட்சுமி தலைவா் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்கினார்.
Related Tags :
Next Story