அரியலூர்- ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவர்கள் தேர்வு
அரியலூர்- ஜெயங்கொண்டம் நகராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூர்:
மறைமுக தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரியலூர் நகராட்சியில் தி.மு.க. 7 வார்டுகளிலும், அ.தி.மு.க. 7 வார்டுகளிலும், சுயேச்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இதனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் சமமாக இருந்த நிலையில், சுயேச்சை கவுன்சிலர்கள் 3 பேர் தி.மு.க.விற்கு ஆதரவு அளித்தனர். இதையடுத்து அரியலூர் நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து தி.மு.க. சார்பில் நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளராக சாந்தி கலைவாணன் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று காலை அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதையொட்டி துணை சூப்பிரண்டு ராஜன் தலைமையிலான போலீசார் நகராட்சி கவுன்சிலர்களை சோதனை செய்து, நகர்மன்ற கூட்டரங்கிற்குள் அனுமதித்தனர். இதில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது. மேலும் கவுன்சிலர்களுக்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல் தலைமையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, முககவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
தி.மு.க. வெற்றி
இதைத்தொடர்ந்து கூட்ட அரங்கில் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் சாந்தி கலைவாணன் மனு தாக்கல் செய்தார். இதேபோல் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் 17-வது வார்டு கவுன்சிலர் ஜீவாசெந்தில் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியான நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா, தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுவதாக அறிவித்தார். இதையடுத்து 18 வார்டு கவுன்சிலர்களுக்கும் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்களின் பெயர் மற்றும் கட்சி சார்ந்த வாக்குச்சீட்டு அளிக்கப்பட்டது. 18 கவுன்சிலர்களும் வாக்குப்பெட்டியில் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
இதில் 10 வாக்குகள் பெற்ற சாந்தி கலைவாணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜீவாசெந்தில் 8 வாக்குகள் பெற்றார். இதையடுத்து நகராட்சி தலைவராக பொறுப்பேற்ற சாந்தி கலைவாணனுக்கு கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நகராட்சி அலுவலகத்தின் வாசலில் கூடியிருந்த தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். அரியலூர் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சாந்தி கலைவாணனுக்கு, அமைச்சர் சிவசங்கர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அமைச்சருக்கு சால்வை அணிவித்து, அவர் வாழ்த்து பெற்றார்.
ஜெயங்கொண்டம் நகராட்சி
இதேபோல் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த மறைமுக தேர்தலில் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சுமதி சிவகுமாரும், துணைத் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் வேட்பாளராக வெ.கொ.கருணாநிதியும் போட்டியிட்டனர். இதில் மொத்தம் 21 வார்டு கவுன்சிலர்களில் 4 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தவிர, பா.ம.க. உள்பட மற்ற கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில் தலைவராக சுமதி சிவகுமாரும், துணைத்தலைவராக வெ.கொ.கருணாநிதியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 2.30 மணி அளவில் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டு அவரவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். இதில் சிறப்பு விருந்தினராக ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.
இதில் நகராட்சி ஆணையர் சுபாஷினி, பொறியாளர் சித்ரா, பொதுப்பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நகராட்சி அலுவலக பணியாளர்கள், அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு சால்வை அணிவித்து நகராட்சி ஆணையர் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு ஆதரவாளர்கள், உறவினர்கள், கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி கட்சி பிரமுகர்கள் நான்கு ரோட்டில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தேர்தலையொட்டி ஜெயங்கொண்டம் நகராட்சியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Related Tags :
Next Story