கோலாா் தங்கவயல் புதிய போலீஸ் சூப்பிரண்டாக தரணி தேவி நியமனம்
கோலார் தங்கவயல் புதிய போலீஸ் சூப்பிரண்டாக தரணி தேவி நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கோலார் தங்கவயல்:
கோலார் தங்கவயல்
கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் தங்க சுரங்கம் செயல்பட்டு வந்ததால், ஆங்கிலேயர்கள் பாதுகாப்புக்காக அங்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை அமைத்தனர். ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு பிறகும் தங்கவயலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கோலார் மாவட்டத்தில் தங்கவயல் போலீஸ் மாவட்ட அந்தஸ்து பெற்று விளங்கியது.
இந்த நிலையில், இந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்படுவதாக வதந்தி பரவியது. அதற்கேற்றார் போல், போலீஸ் சூப்பிரண்டு இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய போலீஸ் சூப்பிரண்டும் நியமிக்கப்படவில்லை. இதனால் தங்கவயலுக்கு போலீஸ் மாவட்ட அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக தகவல் பரவியது.
முழுஅடைப்பு
இதனை கண்டித்து தங்கவயல், பங்காருபேட்டை பகுதிகளில் தலித் அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்பினர் முழுஅடைப்பு போராட்டமும் நடத்தினார்கள். மேலும், தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதர், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் ஆகியோரை சந்தித்து போலீஸ் மாவட்ட அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக கர்நாடக சட்டசபையிலும் அவர் குரல் எழுப்பினார். மேலும் தங்கவயல் மக்கள், போலீஸ் மாவட்ட அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமனம்
இந்த நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கோலார் தங்கவயலுக்கு புதிய போலீஸ் சூப்பிரண்டை நியமித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, கோலார் தங்கவயல் புதிய போலீஸ் சூப்பிரண்டு தரணி தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மைசூருவில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளியில் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார். தங்கவயலுக்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமிக்கப்பட்டுள்ளதால், அந்தப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story