கல்குவாரியில் பாறாங்கல் உருண்டு விழுந்து 10 பேர் உடல் நசுங்கி பலி
சாம்ராஜ்நகரில் கல்குவாரியில் பாறாங்கல் உருண்டு விழுந்து 10 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த சம்பவத்தில் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கொள்ளேகால்:
கல்குவாரி
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா மடஹள்ளி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கும்பகல்லு கிராமத்தில் ஸ்ரீராமகுன்று மலை உள்ளது. இந்த மலையில் அதேப்பகுதியை சேர்ந்த மகேந்திரப்பாவுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கேரளாவை சேர்ந்த அக்கீம் என்பவர், அரசின் அனுமதி பெற்று குத்தகை அடிப்படையில் கல்குவாரி நடத்தி வருகிறார்.
இந்த கல்குவாரியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்த கல்குவாரியில் பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு, கற்களாக மாற்றி பொக்லைன் எந்திரங்கள் மூலம், டிராக்டர் லாரிகளில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
பாறாங்கல் உருண்டது
இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல கல்குவாரியில் பாறை வெடி வைத்து தகர்க்கப்பட்டு கற்களை உடைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. மேலும் கற்களை ஏற்றி செல்வதற்காக ஏராளமான டிப்பர் லாரிகளும், டிராக்டர்களும் அந்தப்பகுதியில் அணிவகுத்து நின்றன. இந்த நிலையில் காலை 11.30 மணி அளவில் கல்குவாரியில் வெடி வைக்கப்பட்டது. அப்போது வெடியின் அதிர்வால் குன்றின் மேல் இருந்து பெரிய பாறாங்கல் ஒன்று எதிர்பாராதவிதமாக உருண்டு கீழே விழுந்தது.
இதனால், கற்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் பாறாங்கல்லின் அடியில் சிக்கி உடல் நசுங்கி மண்ணுக்குள் புதைந்தனர். மேலும், டிப்பர் லாரிகளும் கவிழ்ந்து நசுங்கியது.
10 பேர் நசுங்கி பலி
இந்த கோர விபத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தும், உடல் நசுங்கியும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் குண்டலுபேட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர். 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சாம்ராஜ்நகர், மைசூரு அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் சுமார் 10 பேர் உடல் நசுங்கி பலியானது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனாலும் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் போலீசார் கருதுகிறார்கள். உயிரிழந்த தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்து இருப்பதால் அவர்களின் உடல்களை உடனடியாக மீட்க முடியவில்லை.
6 பேரின் உடல் மீட்பு
இதனால் சம்பவம் நடந்த இடத்துக்கு பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் மண்ணுக்குள் புதைந்து பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு படையினர், அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் மண்ணுக்குள் புதைந்து இருந்த 6 பேரின் உடல்கள் நசுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அந்த உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கோர விபத்து சாம்ராஜ்நகர் மட்டுமின்றி கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் சாருலதா சோமல், போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் மீட்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த விபத்தில் டிப்பர் லாரிகள், டிராக்டர்கள், பொக்லைன் எந்திரங்கள் நொறுங்கி நாசமாகின. இதுகுறித்து குண்டலுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரளாவை சேர்ந்தவர்கள்
இதுகுறித்து கலெக்டர் சாருலதா சோமல் நிருபர்களிடம் கூறுகையில், கல்குவாரியில் நடந்த இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்திருக்கலாம். இதில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர், விவரம் இன்னும் கிடைக்கவில்லை. மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேரின் பெயர், விவரம் தெரியவந்துள்ளது.
அவர்கள் கேரளாவை சேர்ந்த அஸ்ரப், பிரான்சிஸ் என்பது தெரிந்தது. மற்றவர்களின் பெயர், விவரம் தெரியவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் விசாரணையும் நடந்து வருகிறது என்றார்.
Related Tags :
Next Story