மேகதாது திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு - கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு


மேகதாது திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு - கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 March 2022 3:17 AM IST (Updated: 5 March 2022 3:17 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபையில் வரியில்லாத பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தாக்கல் செய்தார். இதில் மேகதாது திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:
  
வரி இல்லாத பட்ஜெட் தாக்கல்

  கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று கூடியது. பகல் 12.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, 2022-23-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை (வரவு-செலவு திட்ட அறிக்கை) தாக்கல் செய்தார்.

  இதில் ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்து 720 கோடிக்கு செலவினங்கள் மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கர்நாடக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து பசவராஜ் பொம்மை புதிய வரிகள் எதுவும் விதிக்கவில்லை. அதாவது கலால், பெட்ரோல் மீதான வரி, முத்திரைத்தாள் வரிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத அதே நேரத்தில் புதிய திட்டங்களை உள்ளடக்கிய பட்ஜெட்டாக உள்ளது.

முக்கிய அம்சங்கள்

  இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
  * விவசாயிகள் உழவு பணிகளை எந்திரங்கள் மூலம் மேற்கொள்வதை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.250 மானியம் வழங்க ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

  * அனைத்து மாவட்டங்களிலும் மினி உணவு பூங்காக்கள் அமைக்கப்படும்.

  * வட்டி மானிய திட்டத்தின் கீழ் 33 லட்சம் விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கப்படும்.

  * பிரதமர் கிருஷி சின்சாயி திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் 57 தாலுகாக்களில் ரூ.642 கோடி செலவில் நீர்நிலைகள் மேம்படுத்தப்படும்.

2 இடங்களில் வேளாண் கல்லூரிகள்

  * பெலகாவி மாவட்டம் அதானி, பல்லாரி மாவட்டம் அகரியில் வேளாண்மை கல்லூரிகள் திறக்கப்படும்.

  * ஆண்டுக்கு 2 பருவம் பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் பட்டு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

  * புதிதாக 1,000 கால்நடை மருத்துவ மையங்கள் தொடங்கப்படும்.

  * ஆடு வளர்ப்பவர்கள் திடீரென இறக்க நேரிட்டால் அவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் கிடைக்க காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும்.

  * கிருஷ்ணா மேலணை திட்டத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

  * கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும்.

  * எத்தினஒலே குடிநீர் திட்டத்திற்கு ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.

  * சில குறிப்பிட்ட மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தலா ரூ.1½ லட்சம் வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படும்.

  * மண்டியாவில் உள்ள மைசுகர் சர்க்கரை ஆலையை அரசே நடத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும்.

  * பின்தங்கிய பகுதிகளில் புதிதாக 7 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும்.

சலுகை கட்டண பாஸ்

  * திருமணம் ஆகாத பெண்கள், விதவைகள், பாலின சிறுபான்மையினருக்கான (திருநங்கைகள்) மாத உதவித்தொகை ரூ.600-ல் இருந்து ரூ.800 ஆக உயர்த்தப்படும்.

  * ‘நேக்காரர சம்மான்' திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் உதவித்தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.

  * கட்டிட தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கு ரூ.2,610 கோடியில் திட்டங்கள் அமல்படுத்தப்படும்.

  * கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகை கட்டண பஸ் பாஸ் திட்டம் மாநிலம் முழுவதும் விஸ்தரிக்கப்படுகிறது.

பசுமை விமான நிலையம்

  * வாடகை கார் உள்பட வாடகை வாகனங்களின் டிரைவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்படும்.

  * ஆஷா ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், மதிய உணவு திட்ட சமையலர்கள், உதவியாளர்களுக்கு சம்பளம் ரூ.1,000 ஆக உயர்த்தப்படுகிறது.

  * அங்கன்வாடி ஊழியர்களுக்கு அவர்களின் பணி அனுபவத்தின் அடிப்படையில் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை சம்பளம் உயர்த்தப்படுகிறது.

  * துப்புரவு தொழிலாளர்களுக்கு இடர்பாட்டு படியாக மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.

  * கல்யாண கர்நாடக வளர்ச்சி வாரியத்திற்கு ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

  * ரூ.3,500 கோடியில் 2,275 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலைகள் ஏற்படுத்தப்படும்.

  * சென்னை-பெங்களூரு-மைசூரு அதிவேக ரெயில் திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசுடன் கர்நாடகம் இணைந்து செயல்படும்.

  * ரூ.186 கோடியில் ராய்ச்சூரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும்.

  * பெங்களூருவில் ரூ.8,409 கோடியில் உள்கட்டமைப்பு மேம்பாடு, கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களை நவீனப்படுத்துவது, நீர்வழித்தடத்தை ஏற்படுத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

  * அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளித்து கோவில்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும்.

  மேற்கண்ட அம்சங்கள் உள்பட ஏராளமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேகதாது திட்டத்திற்கு ரூ.1,000 கோடி நிதி

  கர்நாடகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் 66 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கொள்ளளவு கொண்ட புதிய அணை கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் அமைக்க வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் மத்திய அரசு மேகதாது திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்காமல் உள்ளது.

  இந்த நிலையில் மேகதாது திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நடத்தியது. அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேகதாது திட்டத்திற்கு பட்ஜெட்டில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கி அறிவித்துள்ளார்.

Next Story