திருமங்கலம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
திருமங்கலம் நகராட்சி தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க போதிய கவுன்சிலர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
திருமங்கலம்,
திருமங்கலம் நகராட்சி தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க போதிய கவுன்சிலர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
27 வார்டுகள்
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருமங்கலம் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் தி.மு.க. 18 வார்டுகளிலும், தே.மு.தி.க. 2 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. இதில் 7-வது வார்டில் வெற்றி பெற்ற தே.மு.தி.க. வேட்பாளர், தி.மு.க.வில் இணைந்தார்.
தி.மு.க. சார்பாக போட்டியிட்டு 6-வது வார்டில் வெற்றி பெற்ற ரம்யா முத்துக்குமாரை திருமங்கலம் நகராட்சியின் தலைவருக்கான வேட்பாளராக தி.மு.க. தலைமை அறிவித்தது.
13 கவுன்சிலர்கள்
நேற்று தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்க இருந்த நிலையில் திடீரென 13-வது வார்டில் தி.மு.க. சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. நகர் பொறுப்பாளர் முருகனின் மருமகள் சர்மிளா நகராட்சி தலைவர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து நகராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று காலை 10 மணி அளவில் நடைபெற இருந்தது. 9.30 மணி அளவில் சர்மிளா மற்றும் அவரது ஆதரவாளர்களான 12 தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் தே.மு.தி.க. சார்பில் வெற்றி பெற்ற ஒரு கவுன்சிலர் நகராட்சி அலுவலகம் வந்தனர். இவர்கள் சுமார் 10 மணி வரை அலுவலகத்திலேயே மற்ற கவுன்சிலர்களுக்காக காத்திருந்தனர். ஆனால் மற்ற தி.மு.க. கவுன்சிலர்கள், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வரவில்லை. தேர்தல் நடத்த 50 சதவீதம் கவுன்சிலர்கள் தேவை என்ற நிலையில் மொத்தமாக 13 பேர் மட்டுமே வந்திருந்தனர். இதன் காரணமாக திருமங்கலம் நகராட்சி கமிஷனர் மற்றும் தேர்தல் அதிகாரியுமான டெரன்ஸ் லியோன், தேர்தலை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
துணைத்தலைவர் தேர்தல்
இதையடுத்து 13 கவுன்சிலர்களும் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இந்த நிலையில் நேற்று மாலை 2.30 மணிக்கு நகராட்சி துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. அதற்கும் ஒரு தரப்பை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர்கள் 12 பேர் மட்டும் வந்திருந்தனர். இதையடுத்து துணைத்தலைவர் தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் திருமங்கலம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார்.
Related Tags :
Next Story