ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயராக எஸ்ஏசத்யா பதவி ஏற்பு துணை மேயராக ஆனந்தய்யா தேர்வு
புதிதாக தரம் உயர்த்தப்பட்ட ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவை சேர்ந்த எஸ்ஏ சத்யா பதவி ஏற்று கொண்டார். துணை மேயராக ஆனந்தய்யா தேர்வு செய்யப்பட்டார்.
ஓசூர்:
புதிதாக தரம் உயர்த்தப்பட்ட ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயராக தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஏ.சத்யா பதவி ஏற்று கொண்டார். துணை மேயராக ஆனந்தய்யா தேர்வு செய்யப்பட்டார்.
ஓசூர் மாநகராட்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சி கடந்த 2016-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த மாநகராட்சி முதல் தேர்தலை சந்தித்தது. இதில், தி.மு.க. 21 வார்டுகளிலும், அ.தி.மு.க. 16 வார்டுகளிலும், வெற்றிபெற்றது. பா.ஜ.க., காங்கிரஸ், பா.ம.க. ஆகிய கட்சிகள் தலா 1 வார்டிலும், சுயேச்்சைகள் 5 வார்டுகளிலும் பெற்றி பெற்றன. பின்னர், 4 சுயேச்சை கவுன்சிலர்கள் தி.மு.க.விலும், 1 சுயேச்சை கவுன்சிலர் காங்கிரஸ் கட்சியிலும் இணைந்தனர்.
இதையடுத்து மாநகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க.விற்கு தனி பெரும்பான்மை கிடைத்தது. ஓசூர் மாநகராட்சி மேயராக நகர பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான. எஸ்.ஏ.சத்யாவும், துணை மேயராக ஆனந்தய்யாவும் அறிவிக்கப்பட்டனர். நேற்று மாநகராட்சி மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடந்தது. தி.மு.க. சார்பில் எஸ்.ஏ.சத்யாவும், அ.தி.மு.க. சார்பில் நாராயணனும் போட்டியிட்டனர்.
எஸ்.ஏ.சத்யா வெற்றி
இதில் எஸ்.ஏ.சத்யா 27 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். நாராயணனுக்கு 18 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து எஸ்.ஏ.சத்யா வெற்றி பெற்றதாக மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் அறிவித்தார். இவருக்கு ஆணையாளர் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., முன்னாள் வேப்பனபள்ளி எம்.எல்.ஏ. முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சத்யாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, மதியம் சத்யா, மேயர் அங்கி அணிந்து பதவி ஏற்றார். அவருக்கு, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. மற்றும் ஆணையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் செங்கோல் வழங்கினர்.
துணை மேயர்
பின்னர் நடைபெற்ற துணை மேயருக்கான தேர்தலில், தி.மு.க.வை சேர்ந்த ஆனந்தய்யா 25 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட விஜயப்பிரகாஷ் (அ.தி.மு.க.) 19 ஓட்டுகள் பெற்றார். ஒரு ஓட்டு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆனந்தய்யாவுக்கு, ஆணையாளர் பாலசுப்பிரமணியன் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், மேயர் எஸ்.ஏ.சத்யா, எம்.எல்.ஏ. பிரகாஷ் மற்றும் கட்சியினர் ஆனந்தய்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஓசூர் மாநகராட்சி மேயர் துணை மேயர்களாக தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை வரவேற்று, கட்சியினர் நகரின் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.
Related Tags :
Next Story