போட்டி வேட்பாளரை நிறுத்தியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்
ெபா.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. போட்டி வேட்பாளரை தி.மு.க. நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பொம்மிடி:-
ெபா.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. போட்டி வேட்பாளரை தி.மு.க. நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தலைவர் பதவி
தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 10 வார்டுகளிலும், கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி. 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. பா.ம.க. 3 வார்டுகளில் வெற்றி பெற்றது. தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. வி.சி.க. சார்பில் வார்டு உறுப்பினர் சின்னவேடி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. வார்டு உறுப்பினர் சாந்தி போட்டியிட்டார். இதனால் அந்த பகுதியில் திரண்டு இருந்த வி.சி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தலைவர் பதவி வி.சி.க. வுக்கு ஒதுக்கப்பட்டும், தி.மு.க. வேட்பாளரை நிறுத்தியதை கண்டித்து அந்த கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.
போட்டி வேட்பாளர் வெற்றி
இதற்கிடையே பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கையின் போது தி.மு.க.வை சேர்ந்த போட்டி வேட்பாளர் சாந்தி 8 வாக்குகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சின்னவேடி 7 வாக்குகளும் பெற்றார். போட்டி வேட்பாளர் சாந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என தேர்தல் அதிகாரி நாகராஜன் கூறினார்.
இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க. நிர்வாகிகள் கூட்டணி கட்சிக்கு துரோகம் விளைவித்து விட்டதாக கூறியும், மீண்டும் வி.சி.க.வுக்கு தலைவர் பதவி ஒதுக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.
பஸ் கண்ணாடி உடைப்பு
இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு மற்றும் ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காலை 10.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 12.40 மணி வரை நடந்தது. அப்போது மருதுபாண்டி என்பவர் திடீரென அந்த பகுதியில் நின்ற அரசு பஸ்சின் கண்ணாடியை ஒரு கட்டையால் அடித்து உடைத்தார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் மருதுபாண்டியை கைது செய்தனர். வி.சி.க. வேட்பாளருக்கு போட்டியாக தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதால் அந்த பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story