பூந்தமல்லி நகராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு - கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


பூந்தமல்லி நகராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு - கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 5 March 2022 8:57 AM IST (Updated: 5 March 2022 8:57 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தேர்தலை நடத்தக்கோரி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி, 

பூந்தமல்லி நகராட்சி 21 வார்டுகளை கொண்டது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 12 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், காங்கிரஸ் 1 வார்டிலும், சுயேச்சைகள் 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.

பூந்தமல்லி நகராட்சி தலைவர் வேட்பாளராக 18-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காஞ்சனா சுதாகரை தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

நேற்று காலை பூந்தமல்லி நகராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. தி.மு.க. சார்பில் காஞ்சனா போட்டியிட்டார். அப்போது அவருக்கு எதிராக பூந்தமல்லி நகர தி.மு.க. செயலாளர் ரவிக்குமாரின் மனைவி மாலதியும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். மேலும் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற கீதா என்பவரும் போட்டியிட்டார். இதனால் பூந்தமல்லி நகராட்சி தலைவர் தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது.

இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலரான நாராயணன், தலைவருக்கான தேர்தலை நடத்தினார். 2 கவுன்சிலர்கள் ஓட்டு போட்டனர். அப்போது தலைவர் தேர்தலை ஒத்தி வைப்பதாகவும், தேர்தல் நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் நடத்தும் அலுவலர் நாராயணன் திடீரென அறிவித்தார்.

உள்ளிருப்பு போராட்டம்

இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தலை நடத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். தேர்தலை நடத்தாமல் வெளியே செல்லமாட்டோம் என்று கூறி அவர்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் நகர செயலாளர் ரவிக்குமாரின் ஆதரவாளர்கள் நகராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து மதியம் நடைபெற்ற பூந்தமல்லி நகராட்சி துணை தலைவருக்கான மறைமுக தேர்தலும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ேமலும் நகராட்சி தலைவர், துணை தலைவர் மறைமுக தேர்தல் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சார்பில் பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் வெளியே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால் பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

Next Story