மேயராக சுஜாதா, துணை மேயராக சுனில்குமார் போட்டியின்றி தேர்வு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
வேலூர் மாநகராட்சியில் மேயராக சுஜாதா ஆனந்த்குமாரும், துணை மேயராக சுனில்குமாரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்தனர்.
வேலூர்
வேலூர் மாநகராட்சியில் மேயராக சுஜாதா ஆனந்த்குமாரும், துணை மேயராக சுனில்குமாரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்தனர்.
தேர்தல்
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 44 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் ஓரிடத்திலும், அ.தி.மு.க. 7 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 6 இடங்களிலும், பா.ம.க., பா.ஜ.க. தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 3 பேர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் வேலூர் மாநகராட்சியில் தி.மு.க.வின் பலம் 48 ஆக உயர்ந்துள்ளது.
மாநகராட்சி மேயர்
இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர், துணை மேயருக்கான தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதன்படி நேற்று காலை 9.30 மணிக்கு மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் பதவிக்கான தேர்தல் நடந்தது. மாநகராட்சி அலுவலகத்திற்குள் கவுன்சிலர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. 48 கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
7 அ.தி.மு.க. உறுப்பினர்களும், தி.மு.க. உறுப்பினர்கள் 2 பேரும், 3 சுயேச்சைகளும் கலந்து கொள்ளவில்லை. மேயர் தேர்வு செய்யப்பட்ட பின்னர் ஒரு தி.மு.க. உறுப்பினர் அங்கு வந்தார்.
கூட்டம் ஆரம்பித்ததும் மேயர்பதவி பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மேயர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த சுஜாதாஆனந்த்குமார் மனுதாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. அவரது மனு பரிசீலனை செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் வேலூர் மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் அறிவித்தார்.
இதனைதொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு துணை மேயர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் 51 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 7 அ.தி.மு.க. உறுப்பினர்களும், பா.ஜனதா கவுன்சிலர் சுமதி மனோகரன் மற்றும் தி.மு.க.கவுன்சிலர் புஷ்பலதா ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை.
துணை மேயர்
இதையடுத்து துணை மேயர் பதவிக்கு 8-வது வார்டில் போட்டியின்றி கவுன்சிலராக வெற்றி பெற்ற சுனில்குமார் மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. அவரது மனு பரிசீலனை செய்யப்பட்டது. பின்னர் சுனில்குமார் துணை மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தேர்வு செய்யப்பட்ட மேயர் மற்றும் துணை மேயருக்கு கட்சியினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேயர், துணை மேயர் தேர்தலையொட்டி வேலூர் மாநகராட்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
----
தி.மு.க. கவுன்சிலர் புறக்கணிப்பு
வேலூர் மாநகராட்சி மேயர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் தி.மு.க.வை சேர்ந்த புஷ்பலதா வன்னிராஜா வரவில்லை. வேலூர் மேயர் பதவி புஷ்பலதாவுக்கு கிடைக்கும் என கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு மேயர் சீட் வழங்கவில்லை.
புஷ்பலதா தரப்பினர் கட்சி நிர்வாகிகளிடம் ஏன்? சீட்டு தரவில்லை என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து புஷ்பலதாவின் கணவர் வன்னிராஜா கூறுகையில், வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தேர்தல் நடந்த கூட்டத்திற்கு அனைத்து கவுன்சிலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு அவர்கள் தரப்பில் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. அதனால் புஷ்பலதா கூட்டத்தை புறக்கணித்தார் என்றார்.
--
Related Tags :
Next Story