கோத்தகிரி, குன்னூரில் டேன்டீ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
கோத்தகிரி, குன்னூரில் ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து டேன்டீ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
கோத்தகிரி
கோத்தகிரி, குன்னூரில் ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து டேன்டீ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
வேலை நிறுத்தம்
அரசு தேயிலை மற்றும் காபி தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த ஊதிய உயர்வை வழங்க வலியுறுத்தி சோசலிச தொழிற்சங்கத்தின் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் கோத்தகிரியில் இன்று நடைபெற்றது. முன்னதாக கோத்தகிரி டேன்டீயில் பணிபுரிந்து வரும் சுமார் 120 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து, காலை 10 மணிக்கு காமராஜர் சதுக்கதில் திரண்டனர்.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்று மார்கெட் திடலை அடைந்தனர். அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கரு.வெற்றிவேல் தலைமை வகித்தார். துணைத்தலைவர் வசந்தன், நிர்வாகி ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜ்குமார் வரவேற்றார்.
தொடர் போராட்டம்
இதில், ஓய்வூதிய நிலுவைத்தொகை மற்றும் பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். பழுதடைந்த குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும். கழிப்பிடங்கள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து வனத்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்ப கையெழுத்து இயக்கம் நடந்தது.
அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபடபோவதாக தகவல் பரவியதால், இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், சண்முகவேல், மனோகரன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறும்போது, வருகிற 19-ந் தேதிக்குள் டேன்டீ தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக வனத்துறை அமைச்சர் உறுதி அளித்து உள்ளார். தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றனர்.
குன்னூர்
இதேேபான்று ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் குன்னூரில் டேன்டீ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். மேலும் குன்னூர் லாலி ஆஸ்பத்திரி கார்னரில் இருந்து மவுண்ட்ரோடு, பஸ் நிலையம் வழியாக வி.பி.தெரு வரை பேரணி சென்றனர்.
அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாநில செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
Related Tags :
Next Story