நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நடந்த வாக்கெடுப்பில் வாக்குப்பெட்டியை தூக்கி எறிந்து வெளியேறிய விருத்தாசலம் ஒன்றியக்குழு தலைவர் போலீசார் தடுத்ததால் சுவர் ஏறி குதித்து சாலை மறியலில் ஈடுபட்டார்


நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நடந்த வாக்கெடுப்பில் வாக்குப்பெட்டியை தூக்கி எறிந்து வெளியேறிய விருத்தாசலம் ஒன்றியக்குழு தலைவர் போலீசார் தடுத்ததால் சுவர் ஏறி குதித்து சாலை மறியலில் ஈடுபட்டார்
x
தினத்தந்தி 5 March 2022 10:14 PM IST (Updated: 5 March 2022 10:14 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நடந்த வாக்கெடுப்பின்போது வாக்குப்பெட்டியை தூக்கி எறிந்து அலுவலகத்தை விட்டு ஒன்றியக்குழு தலைவர் சுவர் ஏறி குதித்து வெளியேறி ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.


விருத்தாசலம், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியத்தில் மொத்தம் 19 வார்டுகள் உள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 4, அ.தி.மு.க. 5, பா.ம.க. 4, சுயேச்சை 4, பா.ஜ.க. 1, தே.மு.தி.க. 1 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. 
இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர் செல்லத்துரை, ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக பா.ம.க. கவுன்சிலர் பூங்கோதை தேர்வானார். 

இந்த நிலையில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், அ.தி.மு.க.வில் இருந்து ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரை விலகி தி.மு.க.வில் இணைந்தார். இதற்கிடையே அ.தி.மு.க. கவுன்சிலர் மல்லிகா பாலதண்டாயுதம் இறந்துவிட்டார். இதனால் அந்த வார்டுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.  இதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. கவுன்சிலரான தனம் சிவலிங்கம் தி.மு.க.வில் இணைந்தார். 


இதன் மூலம் அ.தி.மு.க.வின் பலம் 2 ஆக குறைந்தது. அதேபோல் சுயேச்சை கவுன்சிலர் 2 போ் தி.மு.க.வுக்கும், மற்றொரு சுயேச்சை கவுன்சிலர் பா.ஜ.க.விலும் இணைந்தார். இதன் மூலம் தி.மு.க.வின் பலம் 9 ஆக அதிகரித்துள்ளது.

நம்பிக்கை இல்லா தீர்மானம்

இந்த நிலையில் ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரையின் செயல்பாடு சரியில்லை என்று கூறி, அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கவுன்சிலர்கள் கொண்டுவந்தனர். இதில் துணைத்தலைவர் பூங்கோதை உள்பட 15 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு கோட்டாட்சியர் ராம்குமாரை சந்தித்து கடந்த மாதம் மனு கொடுத்தனர்.

இதையடுத்து ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரை மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக சிறப்பு கூட்டத்தை கோட்டாட்சியர் நேற்று ஒன்றிய அலுவலகத்தில் கூட்டியிருந்தார்.

இதற்கு கோட்டாட்சியர் ராம்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் பூங்கோதை, 16 கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர். தி.மு.க. கவுன்சிலர் பரமகுரு மலர்க்கொடி கூட்டத்தை புறக்கணித்தார். 

எதிராக வாக்களிக்க... 

பரபரப்பான சூழலில் சிறப்பு கூட்டத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடந்தது. அதில் கோமங்கலம் கவுன்சிலர் தன்னுடைய வாக்கை செலுத்த முயன்றார். அப்போது அங்கிருந்த மற்றொரு கவுன்சிலர் ஒருவர் அவருக்கு சரியாக பார்வை தெரியாது என்று கூறி அவருக்கு உதவி செய்ய சென்றார்.


மேலும் ஒரு சில கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரைக்கு எதிராக வாக்களிக்கும்படி மற்ற கவுன்சிலர்களை வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

வாக்குப்பெட்டியை தூக்கி எறிந்தார்

இதனால் ஆத்திரமடைந்த ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரை வாக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும் என்று கூறி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 
அப்போது அங்கிருந்த தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசிய அவர், சிறிது நேரத்தில் வாக்குப்பெட்டியையும் தூக்கி வீசினார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உள்ளே சென்று ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரையை சமாதானப்படுத்தினர். 

சுவர் ஏறி குதித்து சென்றார்

அப்போது திடீரென ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரை மட்டும் வாக்கெடுப்பு அறையை விட்டு வெளியேறினார். ஆனால், அலுவலகத்திற்கு வெளியே இருந்த இரும்பு கேட்டை போலீசார் இழுத்து மூடி அவர் அங்கிருந்து வெளியே செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து சுவர் ஏறி குதித்து வெளியே சென்ற ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரை, அங்கு அலுவலகத்தின் முன்பு விருத்தாசலம்-கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டார். 

அப்போது அவருக்கு ஆதரவாக விருத்தாசலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கனக கோவிந்தசாமி தலைமையில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணிவேல், வழக்கறிஞர்கள் அருள்குமார், ரவிச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி தமிழ்ச்செல்வன், அட்மா குழு தலைவர் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சுப்பு ஜோதி, ராஜேந்திரபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், தென்றல் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டனர். 

ஒரு ஓட்டு மட்டுமே பதிவானது

இதற்கிடையே அலுவலகத்தின் உள்ளே வாக்கெடுப்பும் நடந்து முடிந்தது. இதில் ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரைக்கு எதிராக 16 ஓட்டுகள் பதிவானது. அவருக்கு ஆதரவாக ஒரு ஓட்டு மட்டுமே பதிவானது. 
தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்தவுடன் விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமார் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 


மீண்டும் வாக்கெடுப்பு நடத்த...

அப்போது செல்லத்துரை, தற்போது நடந்த வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும். ஒருசிலர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து எனக்கு எதிராக வாக்களிக்க வலியுறுத்தினார்கள். 

அதனால் கலெக்டர் முன்னிலையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறி மனு கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் ராம்குமார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். 


இது குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்தும், இது தொடர்பாக நடந்த வாக்கெடுப்பு குறித்த விவரமும், இது சம்பந்தமான நகலையும் அரசுக்கு அனுப்பி வைப்போம். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Next Story