2 வீடுகளில் ரூ.3½ லட்சம் நகை- பணம் கொள்ளை


2 வீடுகளில் ரூ.3½ லட்சம் நகை- பணம் கொள்ளை
x
தினத்தந்தி 5 March 2022 11:34 PM IST (Updated: 5 March 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் 2 வீடுகளில் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் மற்றொரு வீட்டில் திருட முயற்சி நடந்துள்ளது.

விழுப்புரம்,

விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை தெய்வநகர் முதல் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன் மகன் ரகுநாத் (வயது 34). இவர் விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் நகை தொழில் வேலை செய்து வருகிறார். இவர் தற்போது இருக்கும் வீட்டில் இருந்து அதே பகுதியில் உள்ள வேறொரு வாடகை வீட்டிற்கு குடியேறுவதற்காக நேற்று முன்தினம் அந்த வீட்டில் பால் காய்ச்சினார்.
ஆனால் பழைய வீட்டில் இருந்து புதியதாக குடியேறிய வீட்டிற்கு இன்னும் பொருட்களை எடுத்துச்செல்லாத நிலையில் புதிய வாடகை வீட்டில் நேற்று முன்தினம் இரவு ரகுநாத்தின் குடும்பத்தினர் தங்கினர். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ரகுநாத், தான் குடியிருந்த பழைய வீட்டிற்கு வந்தார்.

8 பவுன் நகை கொள்ளை

அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 8 பவுன் நகை கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.2½ லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கதவு பூட்டு உடைப்பு

இதேபோல் விழுப்புரம்- செஞ்சி சாலையில் உள்ள மனோ கார்டன் பகுதியில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன் மகன் சுகுமார் (38). மளிகை கடை உரிமையாளரான இவர் நேற்று முன்தினம் மாலை தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை அழைத்துக்கொண்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று அவரை உள்நோயாளியாக அனுமதித்து உடனிருந்து கவனித்தார்.
இந்த நிலையில் இவருடைய வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை  உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த  பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 2½ பவுன் நகை, ரூ.7 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 வெள்ளி குத்துவிளக்குகள் ஆகியவற்றை திருடிக்கொண்டு சென்றனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு வீட்டில்

மேலும் விழுப்புரம் வழுதரெட்டி நேதாஜி நகரில் வசித்து வரும் மணிசேகர் மனைவி ராதா (54) என்பவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை அங்கிருந்து திரும்பி விழுப்புரம் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உடனே அவர், உள்ளே சென்று பார்த்தபோது பணம், பொருள் எதுவும் திருட்டு போகவில்லை. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

Next Story