17-ம் நூற்றாண்டு நாயக்கர் கால தான கல்வெட்டு கண்டெடுப்பு
அருப்புக்கோட்டை அருகே 17-ம் நூற்றாண்டு நாயக்கர் கால தான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே 17-ம் நூற்றாண்டு நாயக்கர் கால தான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நிலதான கல்வெட்டு
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் விஜயராகவன் தலைமையில் வரலாற்றுத் துறை மாணவர்கள் ராஜபாண்டி மற்றும் சரத்ராம் ஆகியோர் குருந்தமடத்தில் மேற்புற களஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாயக்கர் கால நிலதான கல்வெட்டு சூலக்கல்லில் இருப்பதை கண்டறிந்தனர்.
இதுகுறித்து உதவி பேராசிரியர் விஜயராகவன் கூறியதாவது:-
17-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கல்வெட்டில் 81 வரிகள் உள்ளன. இந்த கல்வெட்டின் மூலம் குருந்தமடையில் நான்கு எல்லைக்கு உட்பட்ட நிலத்தை தானமாக அளித்துள்ள தகவல் தெரிகிறது.
இந்த தானமாக கொடுக்கப்பட்ட நிலங்களை சந்திரன், சூரியன் உள்ளவரை அனுபவித்துக் கொள்ளலாம் எனவும் மேலும் தானமாக கொடுக்கப்பட்ட இந்த நிலத்தை யாரேனும் அபகரிக்க நினைத்தால் அல்லது ஏமாற்ற நினைத்தால் கங்கைக்கரையில் காராம் பசுவைக்கொன்ற பாவமும், தாய், தந்தையை கொன்ற பாவமும் வந்து சேரும் என சூலக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.
அரச மரியாதை
இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள நாயக்கர்கால மன்னர்களான விஸ்வநாத நாயக்கர் (1529-1564), மதுரை நாயக்கரின் முதல் அரசர் ஆவார். ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் (1622-1689) மதுரை நாயக்கர் ஆட்சியில் பத்தாவது ஆட்சியாளர் ஆவார். இந்தக்கல்வெட்டு 1678-ல் வெட்டப்பட்டுள்ளது. அப்போதைய ஆட்சியாளர் சொக்கநாத நாயக்கர் (1659-1682), அவருடைய மனைவி ராணி மங்கம்மாள் ஆகியோருடைய மகன் ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் ஆவார்.
இவர் சிறு வயதாக இருக்கும் போதே அரசருக்குரிய மரியாதை கொடுக்கும் வகையில் இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. மேலும் நாயக்கர் கால ஆட்சியின் போது இருந்த குருந்நமடை என பெயர் பெற்ற இந்த ஊர் தற்போது குருந்தமடம் என மாறி உள்ளது. இதன் மூலம் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளைக்கு குருந்தமடத்திலிருந்து நில தானங்கள் வழங்கியது தெரியவந்துள்ளது.
இந்த கல்வெட்டானது ஓய்வு பெற்ற தொல்லியல் துறை இயக்குனர் சாந்தலிங்கம் உதவியோடு படிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story