மொபட்டில் இருந்து ரூ.1.29 லட்சத்தை திருடியவர் கைது
மொபட்டில் இருந்து ரூ.1.29 லட்சத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சுரண்டை:
சுரண்டை சிவகுருநாதபுரம் பகுதியில் மைக்செட் நடத்தி வருபவர் முருகராஜ் மகன் ஜெய்கணேஷ் (வயது 33). இவர் கடந்த மாதம் 8-ந்தேதி தனது குடும்ப செலவுக்காக தங்க நகையை சுரண்டையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்து அதற்கான பணத்தை பெற்று தனது மொபட் பெட்டில் வைத்திருந்தார். பின்னர் அவர் சுரண்டை சேர்ந்தமரம் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஏ.டி.எம்.மில் மேலும் பணம் எடுப்பதற்காக சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது யாரோ மர்மநபர், அவரது மொபட் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.1.29 லட்சத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜெய்கணேஷ் சுரண்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை படையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினர். விசாரணையில், மொபட்டில் இருந்த பணத்தை திருடியவர் சென்னை டி.நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் முருகன் என்ற நூர் முகமது என்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை சென்று அவரை கைது செய்து தென்காசி அழைத்து வந்தனர். பின்னர் அவரை தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story