குமரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வருகை
குமரிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) வருகிறார். அவர் நாகர்கோவில் மாநகராட்சி சாலை பணிகள் மற்றும் வெள்ள சேத சீரமைப்பு பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்கிறார்.
நாகர்கோவில்:
குமரிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) வருகிறார். அவர் நாகர்கோவில் மாநகராட்சி சாலை பணிகள் மற்றும் வெள்ள சேத சீரமைப்பு பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்கிறார்.
முதல்-அமைச்சர் நாளை வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் வருகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் இரவு தூத்துக்குடியில் தங்குகிறார். நாளை (திங்கட்கிழமை) காலையில் அங்கு நடைபெறும் சில நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மதியம் 12.15 மணி அளவில் கார் மூலம் புறப்பட்டு குமரி மாவட்டம் வருகிறார்.
பகல் 2 மணிக்கு நாகர்கோவில் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகையை வந்தடையும் அவரை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.
ஆய்வு மேற்கொள்கிறார்
அதன்பிறகு மாலை 4 மணி அளவில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து பேயன்குழி பகுதிக்குச் செல்லும் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழை வெள்ளத்தின் போது உடைப்பு ஏற்பட்ட கால்வாயில் நடைபெற்ற சீரமைப்பு பணிகளையும், குமாரகோவில் பகுதியில் மழை வெள்ள சேத சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளார்.
பிறகு மாலை 5.30 மணி அளவில் குமரி மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். இரவு 8.30 மணிக்கு மதுரை விமான நிலையத்தை சென்றடையும் அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
கலெக்டர் ஆலோசனை
இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்ட வருகையையொட்டி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது.
இதில் முதல்-அமைச்சர் ஆய்வு பணிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு நேற்று குமரி மாவட்டம் வந்தார். பின்னர் அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதிய உணவு அருந்தும் நாகர்கோவில் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகை, ஆய்வு செய்யும் இடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்வது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
வெற்றி பெற்றவர்கள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையின் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மேயர், துணை மேயர், நகரசபை தலைவர்கள், துணைத்தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் ஆகியோர் சந்தித்து வாழ்த்துப்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story