தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்


தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 6 March 2022 1:49 AM IST (Updated: 6 March 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்:

போராட்டம்
பெரம்பலூர் மாவட்ட மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளரை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். அதன்படி பெரம்பலூரில், மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் மண்டல இணை பதிவாளரை கண்டித்து ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். தலைவர் குணசேகரன், பொருளாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், பெரம்பலூர் மாவட்ட மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நேற்று முன்தினம் மாலை எங்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலரை கோரிக்கைகள் குறித்து பேசுவதற்காக பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
நாளை மறுநாள் முற்றுகை
ஆனால் பேச்சுவார்த்தை கூட்டம் தாமதமாகவே நடந்தது. அப்போது மண்டல இணை பதிவாளர் சங்க நிர்வாகிகளை தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசி உள்ளார். இதனால் சங்க நிர்வாகிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். மண்டல இணை பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு நாள் சிறு விடுப்பு எடுத்து தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பெரம்பலூர் மாவட்ட மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தை மாநில நிர்வாகிகளுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும், என்றனர். போராட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 53 தொடக்க கூட்டுறவு வங்கிகளை சேர்ந்த 45 பெண்கள் உள்பட 177 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story