நசுவினி காட்டாற்று அணைக்கட்டை ஆழப்படுத்த வேண்டும்
வெண்டாக்கோட்டை ஊராட்சி நசுவினி காட்டாற்று அணைக்கட்டை ஆழப்படுத்த வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரம்பயம், மார்ச்.6-
வெண்டாக்கோட்டை ஊராட்சி நசுவினி காட்டாற்று அணைக்கட்டை ஆழப்படுத்த வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணைக்கட்டு
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெண்டாக்கோட்டை ஊராட்சியில் நசுவினி காட்டாறு அணைக்கட்டு உள்ளது. 1975-ம் ஆண்டு முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியால் நசுவினி ஆற்றின் குறுக்கே வெண்டாக்கோட்டை அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டில் தற்போது மழைக்காலங்களில் நீர்வரத்து இருக்கும்போது மட்டும் பாசன வாய்க்கால்களில் நீர் வெளியேற்றப்பட்டு விவசாயம் நடைபெறுகிறது.
பாசனவசதி
இந்த அணைக்கட்டில் இடது புறமும், வலது புறமும் 2 வாய்க்கால்கள் வெட்டப்பட்டு இடதுபுறம் வாய்க்கால் மூலம் வருகிற தண்ணீரில் ராசியங்காடு, சுந்தரநாயகிபுரம், பொன்னவராயன்கோட்டை, உக்கடை, வெண்டாக்கோட்டை, துவரங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் 2540 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுகிறது. வலதுபுறம் உள்ள வாய்க்காலில் வரும் தண்ணீரில் பொன்னவராயன்கோட்டை, பழஞ்சூர், புதுக்கோட்டை உள்ளூர், உள்ளிட்ட கிராமங்களில் 1010 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வெண்டாக்கோட்டை அணையை தமிழக அரசு ஆழப்படுத்தி அகலப்படுத்தினால் மேலும் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
ஆழப்படுத்த கோரிக்கை
ஆண்டுதோறும் மழைக்காலத்தில் இந்த அணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால் வருடத்துக்கு 2 டி.எம்.சி. தண்ணீர் கடலில் சென்று கலக்கிறது. இது விவசாயிகளுக்கு பயனற்ற நிலையில் உள்ளது. எனவே தமிழக அரசு நசுவினி காட்டாறு வெண்டாக்கோட்டை அணைக்கட்டை அகலப்படுத்தி ஆழப்படுத்தி கொடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணையை ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பட்சத்தில் மழைக்காலம் அல்லாமல் எந்த நேரத்திலும் தண்ணீர் தேக்கி வைத்து கடலுக்கு சென்று வீணாக கலக்ககூடிய தண்ணீரை தடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.
மேலும் பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். கால்நடைகளுக்கும் தண்ணீர் பயன்படும். எனவே அரசு துாித நடவடிக்கை எடுத்து இந்த பணிகளை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து வெண்டாக்கோட்டை ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி புருஷோத்தமன் உள்ளிட்ட வெண்டாக்கோட்டை கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
Related Tags :
Next Story