மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தை திருத்த வேண்டும் - பசவராஜ் பொம்மை பேச்சு
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தை திருத்த வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
மோடியின் விருப்பம்
மத்திய அரசு சார்பில் ஜல்ஜீவன்மிஷன், தூய்மை பாரதம் ஆகிய திட்டங்கள் குறித்த தென்மாநிலங்கள் மண்டல மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் கலந்து கொண்டு, மரக்கன்றுக்கு நீர் ஊற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-
மக்களுக்கு நீர் வழங்குவது அரசின் கடமை. நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினைகள் வரும்போது, அனைவரும் கூடி ஆலோசித்து ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும். மக்களின் நிலையான வாழ்க்கைக்கு நீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பது நமது பிரதமர் மோடியின் விருப்பம். அவரது இந்த விருப்பத்தை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.
கால்வாயில் வீணாகிறது
கால்வாய் பாசனத்தில் நீர் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. பாசனத்தில் நீரை சரியான முறையில் வீணாகாமல் பயன்படுத்த வேண்டும். தேசிய அளவில் இத்தகைய கால்வாய்களில் கிடைக்கும் மொத்த நீரில் 46 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 54 சதவீத நீர் கால்வாயில் வீணாகிறது. இந்த கால்வாய்களை மேம்படுத்தினால் மக்களுக்கு அதிகளவில் நீர் கொடுக்க முடியும்.
சரியான நீர் நிலைகள் இல்லாததால் நமக்கு கிடைக்கும் நீரில் பெரும்பகுதி கடலில் போய் கலந்து வீணாகிறது. ஆனால் நமது இயற்கை அறிவியலை மறந்துவிட்டோம். அதாவது கடல் நீரில் 30 சதவீத சாதாரண நீர் கலந்தால் மட்டுமே, அதில் உப்புநீர் ஆவியாகி மேகங்களாக உருவாகின்றன. அதன் மூலம் நமக்கு மழை பெய்து நீர் கிடைக்கிறது. நாம் நீர்ப்பாசன திட்டங்களை வகுக்கும்போது இந்த ஒரு எளிய உண்மையை கருத்தில் கொள்ள வேண்டும்.
வற்றி விடுகின்றன
நாம் சுற்றுச்சூழல் சவால்களை சந்தித்து வருகிறோம். இதனால் வற்றாமல் ஓடும் ஆறுகளில், குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே நீர் ஓடுகின்றன. நீர் கடலுக்கு செல்வதற்கு முன்பே ஆறுகள் வற்றி விடுகின்றன. கர்நாடகத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்ட பணிகளை குறித்த காலத்தில் முடிக்க தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் 97.91 லட்சம் வீடுகள் உள்ளன.
இதில் அடுத்த சில மாதங்களில் 25 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். இந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வசதியாக பட்ஜெட்டில் இதற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நானே மேற்பார்வையிட்டு வருகிறேன். அதனால் இந்த திட்ட பணிகள் குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்கப்படும். கிராமம் மற்றும் நகரங்களில் சரியான குடிநீர் வினியோக முறை இல்லை. அதனால் தற்போது நாம் பின்பற்றும் நீர் மேலாண்மை முறையை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்.
நீர் ஆதாரங்கள்
பிரதமர் மோடி இந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த திட்டத்தை செய்து முடிக்க நாம் போர்க்கால அடிப்படையில் பணியாற்ற வேண்டியது அவசியம். நீர் ஆதாரங்கள் மாநிலத்திற்கு சொந்தமானது. நாம் ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் பணியாற்றி நீர் ஆதாரத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். நீர் உள்ளூர் மற்றும் உலக பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு நாம் உள்ளூர் அளவில் தீர்வு காண வேண்டும்.
நாம் வளரும் நாடாக இருப்பதால் பல்வேறு வகையான பிரச்சினைகள் உள்ளன. அதனால் திட்டங்களை ஒருங்கிணைந்த அணுகுமுறையில் வகுத்து செயல்படுத்த வேண்டும். நீருடன் நமக்கு உணர்வு பூர்வமான தொடர்பு உள்ளது. அதனால் நீர் ஆதாரங்களை பயன்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீட்டு சட்டத்தை முழுமையாக திருத்த வேண்டும். இதன் மூலம் நீர் பங்கீட்டு பிரச்சினைக்கு அரசியல் நோக்கங்கள் இல்லாமல் தீர்வு காண முடியும். இதன் மூலம் மக்களுக்கு அதிகளவில் நீர் வழங்க முடியும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
தமிழ்நாடு, புதுச்சேரி
இதில் கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story