சேலம், ஓமலூரில் பிட் காயினில் முதலீடு செய்வதாக கூறி 2 பேரிடம் ரூ.11½ லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை


சேலம், ஓமலூரில் பிட் காயினில் முதலீடு செய்வதாக கூறி 2 பேரிடம் ரூ.11½ லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 March 2022 2:36 AM IST (Updated: 6 March 2022 2:36 AM IST)
t-max-icont-min-icon

பிட் காயினில் முதலீடு செய்வதாக கூறி சேலம், ஓமலூரில் 2 பேரிடம் ரூ.11½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:
பிட் காயினில் முதலீடு செய்வதாக கூறி சேலம், ஓமலூரில் 2 பேரிடம் ரூ.11½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.5 லட்சம் மோசடி
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 28). இவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய ஒருவர், பிட் காயினில் முதலீடு செய்தால் பல மடங்கு தொகை கிடைக்கும் என்று தெரிவித்தார். 
இதனை நம்பிய அசோக்குமார், பல்வேறு தவணைகளில் ரூ.5 லட்சம் வரை ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார். ஆனால் அதற்கான பலன் கிடைக்கவில்லை. இதனால் மோசடி குறித்து அறிந்த அவர் இது தொடர்பாக மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல், சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நரேஷ்குமார். இவர், பேஸ்புக் (முகநூல்) கணக்கில் பிட்காயின் விற்பனை தொடர்பான தகவலை அறிந்தார். பின்னர் அந்த லிங்கை கிளிக் செய்த நிலையில், வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட எண்ணில் நரேஷ்குமார் தொடர்பு கொண்டு பேசியபோது, ரூ.800 பதிவு கட்டணம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து அந்த பணத்தை செலுத்தியவுடன் பிட்காயின் தொடர்பாக பல்வேறு ஆசைவார்த்தை கூறி முதலீடு செய்யும் பணத்திற்கு பல மடங்கு தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் அதை நம்பிய அவர் ரூ.6 லட்சத்து 44 ஆயிரத்தை பல தவணைகளாக செலுத்தியுள்ளார். ஆனால் அவர்கள் தெரிவித்தபடி பலன்களையும், பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர், சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story