குடிநீர் சீராக வினியோகிக்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் சீராக வினியோகிக்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 March 2022 2:37 AM IST (Updated: 6 March 2022 2:37 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னிமலை
சென்னிமலை அருகே குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் முகாசிபிடாரியூர் ஊராட்சிக்கு உட்பட்டது கூரபாளையம் காலனி. இந்த பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை 7 மணி அளவில் சென்னி மலை-பெருந்துறை ரோட்டில் உள்ள கூரபாளையம் பிரிவு என்ற இடத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், முகாசிபிடாரியூர் ஊராட்சி துணை தலைவர் சதீஷ் என்கிற பி.சுப்பிரமணியம், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
குடிநீர் பிரச்சினை
அப்போது பொதுமக்கள் அவர்களிடம் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் ஏற்றப்பட்டு அங்கிருந்து பொது குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற அளவில் சுமார் ½ மணி நேரம் மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4 அல்லது 5 குடங்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது. இது குடிப்பதற்கு போதுமானதாக இல்லை. பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை நீடித்து வருகிறது.
ஆழ்குழாய் கிணறு
மேலும் கடந்த ஒரு வாரமாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் குடிப்பதற்கு தண்ணீரின்றி அவதிப்படுகிறோம். ஆழ்குழாய் கிணற்றிலும் தண்ணீர் இல்லை. இதனால் நாங்கள் தண்ணீரை குளிக்க உள்பட மற்ற தேவைகளுக்கு பயன்படுத்த முடியாமலும் பெரும் சிரமப்படுகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு தினமும் தவறாமல் ¾ மணி நேரம் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். மேலும் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து தர வேண்டும்’ என்றனர். அதற்கு அதிகாரிகள் ‘இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் சென்னிமலை - பெருந்துறை ரோட்டில் சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story