தாளவாடி அருகே வாழை தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்- பட்டாசு வெடித்து விவசாயிகள் விரட்டினர்


தாளவாடி அருகே வாழை தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்- பட்டாசு வெடித்து விவசாயிகள் விரட்டினர்
x
தினத்தந்தி 6 March 2022 2:37 AM IST (Updated: 6 March 2022 2:37 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே வாழை தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்த யானைகளை பட்டாசு வெடித்து விவசாயிகள் விரட்டினர்.

தாளவாடி
தாளவாடி அருகே வாழை தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்த யானைகளை பட்டாசு வெடித்து விவசாயிகள் விரட்டினர்.
யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, புலி உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இது தொடர் கதையாகி வருகிறது.
தாளவாடி அருகே உள்ள மல்லன்குழியை சேர்ந்தவர் தேவா (வயது 35). விவசாயி. இவரது வீட்டையொட்டி தோட்டம் உள்ளது. அதில் 2 ஏக்கர்  வாழை சாகுபடி செய்துள்ளார்.
வாழைகள் நாசம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து 5 யானைகள் தேவாவின் தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் வாழைகளை மிதித்தும், தின்றும் சேதப்படுத்தி கொண்டிருந்தன. சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தேவா திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அங்கு யானைகள் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அக்கம்பக்கத்து விவசாயிகளிடம் கூறினார். அதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் அங்கு ஒன்று திரண்டு, சத்தம் போட்டும், பட்டாசு வெடித்தும் யானைகளை அங்கிருந்து விரட்ட முயன்றனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் காட்டுக்குள் சென்றன. யானைகளால் சுமார் 400 வாழைகள் சேதமடைந்தன. இதுபற்றி அறிந்ததும் ஜுர்கள்ளி வனத்துறையினரும் அங்கு சென்று பார்த்தனர். அவர்களிடம் விவசாயிகள் கூறும்போது, ‘சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும், அகலமாகவும் அகழி அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story