‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 6 March 2022 2:38 AM IST (Updated: 6 March 2022 2:38 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

ரோட்டில் சிதறும் குப்பை
ஈரோடு மாநகராட்சியின் பணியாளர்கள் தினசரி சேகரிக்கும் குப்பைகளை லாரிகள், டிராக்டர்கள் மற்றும் மினி வேன்கள் மூலம் குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்கிறார்கள். இப்படி கொண்டு செல்லப்படும் பல லாரிகளில் இருந்து குப்பைகள் சாலையில் விழுந்து அசுத்தமாக காணப்படுகின்றன. இதனால் குப்பை லாரிகளின் பின்னால் வாகனங்களில் வருபவர்களின் கண்களில் குப்பை தூசுகள் படுகின்றன. இதனால் அவர்கள் நிலை தடுமாறுகிறார்கள். எனவே மாநகராட்சி பணியாளர்கள் குப்பைகளை சிதறாமல் கொண்டு செல்ல அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். 
சத்யா, சென்னிமலைரோடு, ஈரோடு.

நாய்கள் தொல்லை
பவானி தேவபுரம் பகுதியில் நாய் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வீதிகளில் மக்கள் நடமாட முடியாத அச்சத்தில் உள்ளனர். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தி செல்கின்றன. மேலும் இரு சக்கர வாகனங்களின் குறுக்கே நாய் ஓடுவதால் அதில் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பவானி.

சரிசெய்யப்படுமா? 
ஈரோடு ரங்கம்பாளையம் ஜீவா நகரில் உள்ள பாதாள சாக்கடை மூடி உடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. எனவே பாதாள சாக்கடை மூடியை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ்குமார், ஈரோடு.

தேங்கி நிற்கும் கழிவுநீர்
ஈரோடு சம்பத் நகர் ராணி வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த சில மாதங்களாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. மேலும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடைப்பை சரிசெய்து கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.ரவிந்திரன், சம்பத் நகர், ஈரோடு

வீணாகும் குடிநீர்
பங்களாப்புதூர் அருகே புஞ்சைதுறையம்பாளையத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலய தெருவில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை வடிகால் அமைக்க  ரோடு தோண்டப்பட்டது. பணி முடிந்தும் ரோடு சீரமைக்கப்படவில்லை. மேலும் அந்த இடத்தில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி உடனே ரோட்டை சீரமைத்து குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பங்களாப்புதூர்.

செடி, கொடிகள் அகற்றப்படுமா?
அத்தாணி கைகாட்டி பிரிவை அடுத்த கோவில் அருகே உள்ள மின்கம்பத்தை சுற்றி செடி, கொடி வளர்ந்து காணப்படுகிறது. மேலும் தெருவிளக்கும் எரிவதில்லை. எனவே செடி, கொடிகளை அகற்றி, தெருவிளக்கை ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமசாமி, அத்தாணி.


பாராட்டு
கோபியில் உள்ள பெரிய மொடச்சூர் காட்டுவலவு ரோடு குண்டும், குழியுமாக காணப்பட்டது. எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் காட்டுவலவு ரோட்டை சீரமைத்துள்ளனர். எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கோபி.


Next Story