சோழசிராமணி அருகே விபத்தில் கூலித்தொழிலாளி பலி மற்றொருவர் படுகாயம்
சோழசிராமணி அருகே விபத்தில் கூலித்தொழிலாளி பலி மற்றொருவர் படுகாயம்
பரமத்திவேலூர்:
சோழசிராமணி அருகே உள்ள சிறுபூலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவருடைய மகன் சக்திவேல் (வயது 20). நாமக்கல் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் லோகநாதன் (27). கூலித்தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் ஜமீன் இளம்பள்ளியில் நடைபெற்ற கோவில் விழாவிற்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சோழசிராமணி அருகே வந்தபோது நிலைதடுமாறிய மோட்டார்சைக்கிள் சாலையோரத்தில் உள்ள சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சக்திவேல் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லோகநாதன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அந்த வழியாக வந்தவர்கள் லோகநாதனை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story