அண்ணன் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து சிறுமியை கற்பழித்த வாலிபர் கைது
அண்ணன் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து சிறுமியை கற்பழித்த வாலிபர், போலி ஆவணம் தயாரித்து வெளிநாடு சென்று திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
சிறுமி கற்பழிப்பு
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுமி, 2012-ம் ஆண்டு கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவன் என்பவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
2 மாதத்துக்கு பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர், 2015-ம் ஆண்டு வரை கோர்ட்டில் ஆஜராகி வந்தார். அதன்பிறகு அவர் தலைமறைவானார். இதையடு்த்து அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரை வண்ணாரப்பேட்டை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
போலீசார் அதிர்ச்சி
இந்தநிலையில் தேடப்படும் குற்றவாளியான மாதவன், மாதவரத்தில் தங்கி இருப்பதாக வந்த தகவலின்பேரில் வண்ணாரப்பேட்டை போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கிருந்த மாதவன் என்பவர், “எனக்கும், இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நான் இதுவரை கோர்ட்டுக்கு சென்றதே இல்லை” என்றார். அவரிடம் குற்றவாளியின் பள்ளி சான்றிதழை போலீசார் காண்பித்தனர். அதனை பார்த்த அவர், “இது என்னுடைய சான்றிதழ்தான். ஆனால் காணாமல் போய்விட்டது. என் சகோதரர்தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு உள்ளார்” என தெரிவித்தார். இதையடுத்து தனது பள்ளி ஆவணங்கள் காணாமல் போனதாகவும், அதனை தனது தம்பி தர்மலிங்கம்(வயது 32) திருடியதாகவும் மாதவனிடம் இருந்து புகாரை பெற்றுக்கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
ஆவணங்கள் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சோனைமுத்து என்பவருடைய மகன்கள் மாதவன், தர்மலிங்கம், ராமலிங்கம். தர்மலிங்கத்துக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
மாதவன், சென்னை வேளச்சேரியில் தங்கி வேலை பார்த்து வந்தார். தர்மலிங்கம் 2011-ம் ஆண்டு தனது அண்ணன் மாதவனை பார்க்க சென்னை வந்தார். அப்போது வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றார். அங்கு தனது அண்ணன் மாதவனின் பெயரில் 16 வயது சிறுமியுடன் பழகினார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கற்பழித்துவிட்டு தப்பி சென்றார்.
இது குறித்த புகாரின்பேரின் வண்ணாரப்பேட்டை போலீசார் 2012-ம் ஆண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், தன்னுடைய அண்ணன் மாதவன் வீட்டுக்கு சென்று அவரது பள்ளி சான்றிதழ்களை திருடினார். அதன்மூலம் அண்ணன் பெயரில் போலியாக பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை தயாரித்து 2015-ம் ஆண்டு சிங்கப்பூர் சென்றார்.
வாலிபர் கைது
பின்னர் 2 ஆண்டுகள் அங்கேயே தங்கி வேலை செய்து வந்தார். 2017-ம் ஆண்டு சிங்கப்பூரில் கேரளாவைச் சேர்ந்த பெண்ணை காதலித்து, திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் போலி ஆவணம் தயாரித்து வெளிநாடு சென்ற தர்மலிங்கம், தற்போது சென்னை திரும்பியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரது அண்ணன் அளித்த புகாரின்பேரில் தனிப்படை போலீசார் தர்மலிங்கத்தின் செல்போன் சிக்னலை வைத்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் வைத்து தர்மலிங்கத்தை மடக்கி பிடித்தனர்.
அண்ணன் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து, சிறுமியை கற்பழித்ததுடன், போலியான ஆவணங்களை வைத்து வலம் வந்த தர்மலிங்கத்தை, கற்பழிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டினார். இதையடுத்து தர்மலிங்கத்தை போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story