4-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
நாகையில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் 4-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நாகூரில் கடல் அரிப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.
வெளிப்பாளையம்:
நாகையில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் 4-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நாகூரில் கடல் அரிப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.
3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதுநாகையில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னையிலிருந்து 290 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலைகொண்டுள்ளது. இதனால் நாகை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளதால் நாகை மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. ஆயிரம் பைபர் படகுகள், 350 விசைப்படகுகளை துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
கடல் சீற்றம்
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றமாக உள்ளதால் அதிக அளவில் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக மீன்கள் அதிகம் விற்பனைக்கு வரவில்லை.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தபிறகு தான் மீன்பிடிக்க செல்ல முடியும். அதுவரை மீன்கள் வரத்து குறைவாகவே இருக்கும் என்றனர். நாகை மாவட்டத்தில் நேற்று காலை முதல் மதியம் வரை விட்டு, விட்டு மழை பெய்தது.
வேதாரண்யம்
இதேபோல வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் நேற்று 4-வது நாளாக 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். 4 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடற்கரைபகுதி வெறிச்சோடி கிடந்தது.
கடற்கரை முழுவதும் கடல் சேறு பரவி உள்ளதால் கடல் சீற்றம் தணிந்த பிறகு மீன்பிடிக்க படகுகளை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை முதல் வாகனம் மேகமூட்டமாக காணப்பட்டது. மேலும் தரை காற்றும் வீசியது.
கடல் அரிப்பு
நாகூரில் பட்டினச்சேரி மீனவர் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடற்கரை அருகில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இருந்து பட்டினச்சேரியில் கடல் அலை சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல்நீர் ஊருக்குள் புகுந்தது.
மேலும் கரையோரத்தில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் சம்பவ இடத்துக்கு வந்து கடல் அரிப்பை பார்வையிட்டு கடற்கரையில் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story