தொழிலாளர்கள் போல் தங்கி இருந்து கைவரிசை
தொழிலாளர்கள் போல் தங்கி இருந்து கைவரிசை
திருப்பூர் அடகு கடையில் கொள்ளையடித்த பீகார் வாலிபர்கள் 4 பேரும் திருப்பூரில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்துள்ளனர். கட்டிடத்தின் உள்புறம் மேற்கூரையை அழகுபடுத்தும் பணியில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் திருப்பூரில் உள்ள நகை அடகு கடை, ஜூவல்லரி ஆகியவற்றை தொடர்ச்சியாக நோட்டமிட்டுள்ளனர். இவர்களுக்கு திருப்பூரில் உள்ள ஒருவர் உதவியுள்ளார்.
அவர்தான் மூளையாக செயல்பட்டு எந்தெந்த நகை அடகு கடையில் கொள்ளையடிக்கலாம் என்பது குறித்து திட்டம் வகுத்து கொடுத்துள்ளார். கொள்ளை நடந்த நகை அடகு கடை உள்ள பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்கள் செல்லவில்லை. மேலும் ஆள்நடமாட்டமும் நள்ளிரவு நேரத்தில் குறைவாக இருப்பதை சாதகமாக பயன்படுத்தி இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் உறுதுணையாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். தனிப்படை போலீசார் தொடர்ச்சியாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் கொள்ளையர்கள் உருவம் தெரிந்துள்ளது. திருப்பூர் ரெயில் நிலையம் நோக்கி சென்ற பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்ட கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்கள் ரெயிலில் தப்பிச் சென்ற தகவலை போலீசார் திரட்டினார்கள். மேலும் சென்னை சென்ற பிறகும் சென்னையில் எந்த ரெயிலில் அவர்கள் ஏறினார்கள் என்ற தகவலையும் போலீசார் திரட்டினர்.
மராட்டிய மாநில ரெயில்வே பாதுகாப்பு படை உதவியோடு கொள்ளையர்களை கைது செய்து நகை, பணத்தை மீட்டு உள்ளனர். இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட திருப்பூரில் பதுங்கிய நபரை பிடிப்பதற்கு போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story