தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்


தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
x
தினத்தந்தி 6 March 2022 11:11 PM IST (Updated: 6 March 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தின. இதனை வனத்துறையினர், விவசாயிகள் வனப்பகுதிக்கு விரட்டினர்.

தேன்கனிக்கோட்டை:
பயிர்கள் சேதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தில் விவசாயிகள் தக்காளி, ராகி, சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டு உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின.
இதையறிந்த விவசாயிகள் விரைந்து சென்று வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டும், சத்தம் போட்டும் யானைகளை விரட்டினர். ஆனால் யானைகள் அங்ேகயே முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
எச்சரிக்கை
அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் சேர்ந்து யானைகளை அருகிலுள்ள வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இந்த யானைகள் மீண்டும் விவசாய நிலங்களில் புகாமல் தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
வனப்பகுதியில் யானைகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் யானைகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story