ரூ.17 கோடியில் தடுப்பணை


ரூ.17 கோடியில் தடுப்பணை
x
தினத்தந்தி 6 March 2022 11:39 PM IST (Updated: 6 March 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

ரூ.17 கோடியில் தடுப்பணை

மானாமதுரை, 
மானாமதுரை வைகை ஆற்றின் குறுக்கே ரூ.17 கோடியில் தடுப்பணை கட்டும் பணிக்கு அமைச்சர் பெரிய கருப்பன் அடிக்கல் நாட்டினார். 
தடுப்பணை 
மானாமதுரை நகராட்சியை ஒட்டிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கீழப்பசலை கால்வாய் வழியாக பாசனம் செய்யப்படும் ஏராளமான கண்மாய்களுக்கு தண்ணீர் விரைவாக செல்லும் வகையிலும், மானாமதுரை நகரை ஒட்டியுள்ள குடிநீர் திட்டங்களுக்கு போதிய குடிநீர் கிடைத்திடும் வகையிலும் மானாமதுரை வைகை ஆற்றின் குறுக்கே ரூ. 17 கோடி செலவில் புதிய தடுப்பணை கட்டும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. 
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு தடுப்பணை கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 
இதையடுத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசும் போது, சிவகங்கை மாவட்டத்தில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு, வளர்ச்சிப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வறட்சியான மாவட்டமாக கருதப்படும் சிவகங்கை மாவட்டத்தினை செழிப்பான மாவட்டமாக மாற்றுவதற்கென அனைத்து பணிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. 
பாசன நிலங்கள் 
அதன் தொடக்கமாக மானாமதுரை கிராமம் கீழப்பசலை மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு ஏதுவாக வைகை ஆற்றின் குறுக்கே மானாமதுரை - சிவகங்கை சாலை இணைப்பு பாலத்திற்கு மேல்புறத்தில் தடுப்பணை கட்ட ரூ. 17 கோடியில் நபார்டு திட்டத்தின் மூலம் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அணையின் மூலம் மொத்தம் 547.57 எக்டர் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். 
வெள்ளக்காலங்களில் வைகை ஆற்றில் இருந்து உபரிவெள்ள நீரை மேலப்பசலை கண்மாய் வழியாக நாட்டார்கால்வாய் திட்டத்தின் மூலம் பயன்பெறும் 16 கண்மாய்களில் மாவட்டத்தில் உள்ள 6 கண்மாய்களுக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 கண்மாய்களுக்கும் தண்ணீர் திருப்பி விட இயலும். தடுப்பணை பணிகளை 18 மாத காலத்திற்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார். 


Next Story