தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
அங்கன்வாடி கட்டிடம் சேதம்
அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் ஊராட்சியில் எல்லப்பன்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. அங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால் அங்கன்வாடி கட்டிடம் முழுவதும் தண்ணீர் தேங்கி சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
-சுதாகர், அகரம்.
மணல் கடத்தல்
வாணியம்பாடி, தேவஸ்தானம், பழைய வாணியம்பாடி, ஒடப்பேரி உள்ளிட்ட பாலாற்று பகுதிகளில் இருந்து, பகலில் சிமெண்டு ேகாணிப்பைகளில் மணலை அள்ளி மூட்டைகளாக கட்டி வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகள் மற்றும் தமிழக-ஆந்திரா எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். பலமுறை ஆதாரங்களுடன் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மணல் கடத்தலை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும்.
-கிருஷ்ணன், வாணியம்பாடி.
குப்பைகளை அகற்ற வேண்டும்
பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மருத்துவமனை சுற்றுச்சுவரையொட்டி குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. நகராட்சி துப்புரவு ஊழியர்கள் குப்பைகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
-டி.ஜுனைத்அஹமத், பேரணாம்பட்டு.
சேதமடைந்த சிறுபாலம்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டான பில்லாஞ்சி திடீர்நகர் 1-வது தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் சிறுபாலம் உடைந்து சேதமடைந்துள்ளது. அந்தப் பாலம் கடந்த 3 ஆண்டுகளாக சீரமைக்கப்பட்டாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக மக்கள் செல்ல சிரமப்படுகிறார்கள். சேதமடைந்த சிறுபாலத்தை சீரமைத்துத் தர வேண்டும்.
-கிருஷ்ணராஜ், சோளிங்கர்.
கால்வாய் பணி முழுமை அடையுமா?
வேலூர் சத்துவாச்சாரி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கால்வாய் பணிகள் நடந்து வருகிறது. ஒருசில இடங்களில் கால்வாய் பணிகள் முழுமை அடையாமல் உள்ளது. அவற்றில் ஒன்றான சன்னதி தெரு அருகே வரசித்தி விநாயகர் கோவில் முன்பு கால்வாய் பணி முழுமை அடையாமல் கிடப்பில் உள்ளது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த கால்வாய் பணியை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-விஷ்ணுபிரியன், வேலூர்.
மண், குப்பையை அகற்றுவார்களா?
காட்பாடி ஓடைபிள்ளையார் கோவில் அருகில் மின்வாரிய அலுவலகத்துக்கு செல்லும் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. 2021-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது அந்தக் கால்வாயை தூர்வாரி வெள்ளநீரை வடிய வைத்தனர். தூர்வாரி போட்ட மண், குப்பைகள் குவியல் குவியலாக சாலையோரம் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. சாலையோரம் போடப்பட்ட மண், குப்பை, கான்கிரீட் சிலாப்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றுவார்களா?
-ஜானகிராமன், ஜாப்ராபேட்டை.
Related Tags :
Next Story