மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 99 ஆயிரத்து 749 பேருக்கு சிகிச்சை


மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 99 ஆயிரத்து 749 பேருக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 6 March 2022 11:42 PM IST (Updated: 6 March 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 99 ஆயிரத்து 749 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 99 ஆயிரத்து 749 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
அமைச்சர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து சீர்காழி தலைமை டாக்டர் பானுமதியிடம் கேட்டு அறிந்தார். அதனைத் தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மருந்து பெட்டகம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும், எதிர்காலத்தில் கூடுதலான அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்தும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நான் ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளேன். மயிலாடுதுறை மாவட்டம் எருக்கூரில் நடமாடும் மருத்துவ வாகனத்தை ஆய்வு செய்தோம். அதனை தொடர்ந்து எருக்கூர் காலனி பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்து இதில் 10-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. 
முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க சீர்காழி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஏற்கனவே சி.டி.ஸ்கேன் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் 10-க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் சீர்காழி அரசு ஆஸ்பத்்திரி வளாகத்தில் 4 டயாலிசிஸ் எந்திரமும், மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 4 டயாலிசிஸ் எந்திரமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான நோயாளிகள் பயன் பெற்று வருகின்றனர்.
செவிலியர்களுக்கு குடியிருப்பு
குத்தாலத்தில் 4 படுக்கை வசதியுடன் கூடிய ஐ.சி.யு. வார்டு கட்டிடம் ரூ.67 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் முடிவு பெறும் நிலையில் உள்ளது. சீர்காழி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 8 படுக்கை வசதியுடன் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
 திருவெண்காடு புகழ்பெற்ற புதன் ஸ்தலம் உள்ள ஊராகும். இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்து உள்ளது. இதனை தொடர்ந்து ரூ.1 கோடியில் ஓ.பி.வார்டு கட்டிடமும், ரூ.1 கோடியில் செவிலியர்களுக்கு குடியிருப்பு கட்டிடமும், கட்டப்பட உள்ளது. 
100 சதவீதம் தடுப்பூசி
மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் சிறப்பாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 5 வகை நோய்களுக்கு வீடு தேடி சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம் 99 ஆயிரத்து 749 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. எனவே கடைக்கோடியில் உள்ள மீனவர்கள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி போட முன்வர வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
 ஆய்வின்போது தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் ராதாகிருஷ்ணன்,  ராமலிங்கம் எம்.பி., கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், உதவி கலெக்டர் நாராயணன், சீர்காழி நகரசபை தலைவி துர்கா பரமேஸ்வரி, ஒன்றியக்குழு தலைவர்கள் ஜெயபிரகாஷ், கமலஜோதி தேவேந்திரன், தி.மு.க. நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், சசிகுமார், ரவிக்குமார் மலர்விழி திருமாவளவன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 
பொறையாறு
பொறையாறு அருகே சங்கரன்பந்தல் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பொறையாறு அரசு ஆஸ்பத்திரி, தரங்கம்பாடி அரசு ஆஸ்பத்திரி, திருவெண்காட்டில் உள்ள அரசினர் சுகாதார நிலையம் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

Next Story