பிஸ்கெட் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


பிஸ்கெட் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 March 2022 11:57 PM IST (Updated: 6 March 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் கொசப்பேட்டையில் கடன் தொல்லையால் பிஸ்கெட் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

வேலூர் கொசப்பேட்டையில் கடன் தொல்லையால் பிஸ்கெட் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிஸ்கெட் வியாபாரம்

வேலூர் கொசப்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). இவருடைய மனைவி சொர்ணமால்யா. வெவ்வேறு சாதியை சேர்ந்த இருவரும் காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு லிங்கேஸ்வரன் (7), கார்சன் (3) என்று 2 மகன்கள் உள்ளனர். 

கார்த்திகேயன் சலவன்பேட்டையில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து பிஸ்கெட்டுகள் தயாரித்து, அதனை பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிஸ்கெட்டுகள் சரிவர விற்பனையாகவில்லை என்றும், அதனால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடன் தொல்லையால் தற்கொலை

அதையடுத்து கார்த்திகேயன் தனது நண்பர்கள், உறவினர்கள் உள்பட பலரிடம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளார். அதன்பின்னரும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் ஆகவில்லை. 

இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பி கொடுக்கும்படி கடந்த சில மாதங்களாக கார்த்திகேயனுக்கு தொல்லை கொடுத்து வந்தனர். அதற்காக அவர் வேறு சில நபர்களிடம் பணத்தை பெற்று கடனை அடைக்க முயன்றார்.

ஆனால் எதிர்பார்த்த அளவு பணம் கிடைக்கவில்லை. அதனால் மனமுடைந்த கார்த்திகேயன் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார்.

போலீசார் விசாரணை

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி சொர்ணமால்யா அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கார்த்திகேயனை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து கடன் தொல்லையால் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story