உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பியது கனவு மாதிரி உள்ளது; வேலூர் மருத்துவ மாணவி பேட்டி


உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பியது கனவு மாதிரி உள்ளது; வேலூர் மருத்துவ மாணவி பேட்டி
x
தினத்தந்தி 6 March 2022 11:58 PM IST (Updated: 6 March 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியா திரும்பியது கனவு மாதிரி உள்ளது என்று வேலூரை சேர்ந்த மருத்துவ மாணவி தீபா கூறினார்.

வேலூர்

உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியா திரும்பியது கனவு மாதிரி உள்ளது என்று வேலூரை சேர்ந்த மருத்துவ மாணவி தீபா கூறினார்.

வேலூர் மருத்துவ மாணவி

உக்ரைன் நாட்டின் மீது கடந்த மாதம் 24-ந் தேதி ரஷியா திடீரென போர் தொடுத்தது. வான் மற்றும் தரைவழியாக ரஷியா விமானங்கள் மற்றும் பீரங்கிகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது.

அதனால் உக்ரைன் நாட்டு மக்கள் தங்கள் குழந்தைகளுடன் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகிறார்கள். 
உக்ரைன் நாட்டில் சிக்கிய பல்லாயிரக்கணக்கான இந்தியவாழ் மக்கள் மற்றும் மருத்துவ மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. 

'ஆபரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ் ஏராளமான இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள அனைவரையும் மீட்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் போல்டாவாவில் 4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த ஜெய்சங்கர்-பொற்செல்வி தம்பதியின் மகள் தீபா டெல்லியில் இருந்து நேற்று சென்னைக்கு விமானத்தில் வந்தார். 

அவருடைய பெற்றோர் சென்னை விமானநிலையத்துக்கு சென்று தீபாவை கண்ணீர்மல்க ஆரத்தழுவி வரவேற்றனர். பின்னர் அவரை காரில் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

கனவு மாதிரி உள்ளது

மருத்துவ மாணவி தீபா உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியா திரும்பியது பற்றி கூறுகையில், போல்டாவாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் 20 தமிழர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்தோம். வானில் ரஷிய விமானங்கள் அடிக்கடி பறந்தன. 

குண்டு வெடிப்பு சத்தமும் கேட்டது. ஆனால் உக்ரைன் நாட்டில் இருந்து விமானங்கள் இயக்க முடியாத நிலை காணப்பட்டது. எனவே நான் மற்றும் என்னுடன் இருந்த மற்ற மாணவர்கள் இந்தியா நாட்டிற்கு திரும்ப முடியாது என்று நினைத்தோம். 

ரெயிலில் பல மணிநேரம் பல ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து உக்ரைன் நாட்டின் எல்லைக்கு பல்வேறு சிரமங்களை கடந்து சென்றோம். அங்கிருந்து இந்திய அதிகாரிகள் ஹங்கேரிக்கு அழைத்து சென்றனர். 

கடந்த 3-ந் தேதி ஹங்கேரியில் இருந்து சுமார் 240 பேருடன் சிறப்பு விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. 4-ந் தேதி காலை டெல்லிக்கு வந்தோம். அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்து நேற்று முன்தினம் இரவு விமானத்தில் புறப்பட்டு சென்னைக்கு வந்தடைந்தோம்.

உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியது கனவு மாதிரி உள்ளது. பல்வேறு கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளோம். இந்தியாவிற்கு திரும்ப முடியுமா என்று பல நேரங்களில் நினைத்தது உண்டு. 

தற்போது மகிழ்ச்சியாக உள்ளது. அங்குள்ள மற்ற அனைவரையும் மத்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும் என்று தெரிவித்தார்.


Next Story