தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ராமேசுவரம்,
கொரோனா பரவல் குறைந்து வருவதன் எதிரொலியாக ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் அதிக அளவில் குறைந்து வருகின்றது. அதனால் பெரும்பாலான கோவில்கள் மற்றும் சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலிலும் விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. அக்னி தீர்த்த கடல் மற்றும் 22 தீர்த்தங்களில் நீராடவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இவ்வாறு தீர்த்தமாடிய பக்தர்கள் சாமி மற்றும் அம்மன் சன்னதி பிரகாரங்களில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து சென்றனர்.
அதுபோல் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடற்கரை மற்றும் இரண்டு கடல் சேரும் பகுதியான அரிச்சல்முனை கடல் மற்றும் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
வியாபாரிகள் மகிழ்ச்சி
கொரோனா பரவல் குறைய தொடங்கி உள்ளதால் ராமேசுவரம் கோவில் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த சில நாட்களாகவே சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளதால் வியாபாரிகளும், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தனுஷ்கோடி அரிச்சல்முனை வரும் சுற்றுலா பயணிகள் பலர் மற்றும் இளைஞர்கள் கடல் அரிப்பை தடுப்பதற்காக சாலையை சுற்றி போடப்பட்டுள்ள தடுப்பு கற்கள் மீது ஆபத்தான முறையில் ஏறி நின்று செல்பி எடுத்து வருகின்றனர். ஆகவே அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் யாரும் செல்லாமல் இருக்கும் வகையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story