பக்தர்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா களைகட்டியது தேரோட்டம் இன்று நடக்கிறது


பக்தர்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா களைகட்டியது தேரோட்டம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 7 March 2022 12:14 AM IST (Updated: 7 March 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா களைகட்டியது. பக்தர்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தி வந்து தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

புதுக்கோட்டை:
மாசித்திருவிழா
புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் ஆகும். வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளித்தும், பக்தர்களின் நம்பிக்கையை வீண்போகாமல் காத்தருளும் சக்தி வாய்ந்த அம்மனாகவும், எல்லோராலும் மகமாயி என அழைக்கப்படும் அம்மனாக திகழ்ந்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
மாவட்டத்தில் உள்ள கோவில்களிலேயே நடைபெறும் விழாக்களில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா தான் மிகவும் பெயர் பெற்றது. இந்த கோவில் திருவிழா என்றாலே பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தான். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு மாசித்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் அம்மன் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். பக்தர்கள் பலரும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பால்குடம் எடுத்து வந்தனர்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி விழா நேற்று களைகட்டியது. பக்தர்கள் பலர் பால் குடம் எடுத்து வந்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், சிலர் அலகு காவடி எடுத்தும் பாதயாத்திரையாக வந்து அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் மேள தாளம், டிரம்ஸ் இசை முழங்க பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து வழிபட்டனர். 
கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். நேர்த்திக்கடனாக கோழி, ஆடு ஆகியவற்றை பலியிட்டனர். பக்தர்கள் சிலர் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தை வரம் வேண்டி வேண்டுதல் நிறைவேறியவர்கள் கரும்பில் தொட்டில் கட்டி வந்து அம்மனை தரிசித்தனர். இதனால் கோவிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவில் வளாகம் முழுவதும் எங்கு திரும்பினாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
அம்மனுக்கு அபிஷேகம்
விழாவையொட்டி பக்தர்கள் கொண்டு வந்த பால்குடத்தால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை அம்மன் மீது ஊற்றுவதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன் வழியாக பால் ஊற்றப்பட்ட போது அம்மன் மீது பால் மழை கொட்டியது போல இருந்தது. பக்தர்கள் கண்கொள்ளா காட்சியாக தரிசனம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
 பக்தர்கள் வர, வர, வரிசையாக கோவிலுக்குள் செல்லும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தன. கட்டண தரிசனம், பொதுதரிசனம் என வகைப்படுத்தப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்ட வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாவிளக்கு எடுப்பவர்கள் கோவில் வளாகத்தில் உள்ள சூலாயுதம் முன்பு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் பக்தர்கள் மாவிளக்கு போட்டனர்.
விழாக்கோலம் பூண்டது
கோவிலின் வெளிப்பகுதியில் திண்பண்ட கடைகள், விளையாட்டு பொருட்கள் விற்பனை கடைகள், அழகு சாதன பொருட்கள் விற்பனை கடைகள் உள்பட தற்காலிக கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டிருந்தன. திருவிழாவுக்கு வந்தவர்களில் இந்த கடைகளில் பொருட்கள் வாங்கவும் கூட்டம் காணப்பட்டது. பக்தர்கள் கூட்டத்தால் திருவிழா களை கட்டியது. திருவப்பூர் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. 
நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகையால் ஸ்தம்பித்தது. கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். விழாவையொட்டி கோவில் கோபுரம் உள்ளிட்ட பகுதிகள் மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன.
இன்று தேரோட்டம்
விழாவில் இன்று தேரோட்டத்தையொட்டி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இருந்தும் இன்று பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு அம்மனை தரிசிக்க வருவது உண்டு. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள், அறங்காவலர்கள் குழுவினர் செய்துள்ளனர்.

Next Story