கொசப்பட்டியில் தென்சபரி தர்மசாஸ்தா கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தென்சபரி தர்மசாஸ்தா கோவில் கும்பாபிஷேகம் நடடைபெற்றது.
திருமயம்:
தென்சபரி தர்மசாஸ்தா கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கொசப்பட்டியில் 18 படியுடன் தென்சபரி தர்மசாஸ்தா கோவில் புதிதாக அமைக்கப்பட்டது. இதையடுத்து திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா விமரிசையாக தொடங்கியது. முன்னதாக வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன், தனபூஜை, நவகிரக ஹோமம், பூர்ணாகுதி, கோபூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை மேள தாளம் முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர்.
கும்பாபிஷேகம்
பின்னர் தென்சபரி தர்மசாஸ்தா கோவில் மூலஸ்தானத்தில் உள்ள கலசத்தில் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து தர்மசாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தில் காரைக்குடி, புதுக்கோட்டை, திருமயம், பொன்னமராவதி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், ராமநாதபுரம், பொள்ளாச்சி, தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். திருமயம், பனையப்பட்டி, பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story