ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை-சபாநாயகர் மு.அப்பாவு தகவல்
நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
வள்ளியூர்:
நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
நெல் கொள்முதல் நிலையம்
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என வள்ளியூர், பணகுடி, ராதாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக சபாநாயகருமான மு.அப்பாவுவிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்பேரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் வள்ளியூரில் அமைந்துள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இதையடுத்து வள்ளியூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமை தாங்கினார். வேளாண்மை துறை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
சபாநாயகர் மு.அப்பாவு
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, சபாநாயகர் மு.அப்பாவு திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விளையும் நெல்லை அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பதற்கு வசதி இல்லாமல் இருந்தது. விவசாயிகள், வியாபாரிகளிடம் நெல்லை கிலோ ரூ.14 முதல் ரூ.16 வரை விற்பனை செய்தனர். இதனால் விவசாயிகள் இப்பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு சென்று, வள்ளியூரில் புதிய நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அரசிடமிருந்து அனுமதி பெற்றேன்.
இங்கு நெல் கொண்டு வரும் விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் கொண்டு வரவேண்டும். சன்னரக நெல் கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் 60 காசுகள் எனவும், மோட்டா ரக நெல் கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் 15 காசுகள் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இலவச மின்சாரம்
நெல்லுக்குரிய தொகை ஒரு வாரத்திற்குள் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக சென்றுவிடும். இதனால் அதிக விலை விவசாயிகளுக்கு கிடைக்கும். இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 40 கிலோ எடையுள்ள, ஆயிரம் நெல் மூட்டைகள் தினமும் கொள்முதல் செய்யப்படும்.
இரு மடங்கு மகசூல், மும்மடங்கு வருவாய் என்ற தாரக மந்திரத்துடன் விவசாயிகள் பயிரிட்டு மேம்பட வேண்டும்.
மத்திய அரசு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கு விதித்துள்ள தடையை கடந்து தமிழக அரசு நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிந்து, ராதாபுரம் தாசில்தார் யேசுராஜன், வள்ளியூர் நகர பஞ்சாயத்து தலைவர் ராதா, துணைத்தலைவர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர், சாந்தி, ஜான்ஸ்ரூபா, வள்ளியூர் டி.டி.என். நிறுவனங்களின் தலைவர் லாரன்ஸ், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், விவசாயிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் தரக்கட்டுபாட்டு மேலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story