மருத்துவ படிப்பை தொடர அரசு உதவி செய்ய வேண்டும்


மருத்துவ படிப்பை தொடர அரசு உதவி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 7 March 2022 1:08 AM IST (Updated: 7 March 2022 1:08 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ படிப்பை தொடர அரசு உதவி செய்ய வேண்டும் என உக்ரைனில் இருந்து தஞ்சைக்கு வந்த மாணவர் சூர்யா அரசன் கூறினார்.

தஞ்சாவூர்:
மருத்துவ படிப்பை தொடர அரசு உதவி செய்ய வேண்டும் என உக்ரைனில் இருந்து தஞ்சைக்கு வந்த மாணவர் சூர்யா அரசன் கூறினார்.
உக்ரைனில் இருந்து தஞ்சை வந்த மாணவர்
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. ரஷிய படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் உக்ரைன் நாட்டு மக்கள் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர்.
இவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கி தவித்து வருகின்றனர். உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவ, மாணவிகளை விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரும் பணி நடைபெற்று வருகிறது. அப்படி அழைத்து வரப்பட்டவர்களில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதி நகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சூர்யா அரசன் (வயது 22) என்ற மாணவரும் ஒருவர். உக்ரைனில் 5-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் தஞ்சைக்கு வந்து சேர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
300 கிலோமீட்டர் பயணம்
ரஷியா தொடுத்து வரும் போரால் உக்ரைன் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற போரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. திரும்பிய பக்கமெல்லாம் குண்டுமழை வீசிய வண்ணம் இருந்தன. எப்படி உயிர் பிழைக்க போகிறோம் என்று நினைத்து அஞ்சினேன். எனது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் பார்த்து கவனமாக இரு. சீக்கிரம் தாயகம் வந்து விடுவாய் என ஆறுதல் கூறினர்.
சொந்த ஊரு திரும்புவதற்காக ரூ.70 ஆயிரத்திற்கு டிக்கெட் எடுத்தும் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. நான் மட்டுமின்றி அனைத்து மாணவர்களும் அச்சத்தில் தான் இருந்தோம். போர் தொடங்கிய சில நாட்களில் நான் உள்பட 7 மாணவர்கள் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உக்ரைன்-ஹெங்கேரி எல்லையை கடக்க தலா ரூ.30 ஆயிரம் கொடுத்து காரில் சென்றோம்.
தன்னார்வலர்கள் உதவி
அதிலும் பல்வேறு இடர்பாடுகள் வந்தன. அதையும் கடந்து சென்றோம். எல்லை பகுதிக்கு சென்ற பின்னர் ரெயிலில் ஹெங்கேரி நாட்டுக்கு புறப்பட்டோம். ஆனால் ரெயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. ஒரு நாள் காத்திருந்து தான் அங்கு செல்ல முடிந்தது. அங்கே தன்னார்வலர்கள் பலர் உக்ரைனில் இருந்து வந்தவர்களுக்கு சாப்பாடு, இருக்க இடம் கொடுத்து உதவினர்.
இதையடுத்து மத்தியஅரசு மூலம் விமானத்தில் டெல்லி வந்து பின்னர் சொந்த ஊருக்கு வந்தேன். ஊருக்கு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் போதுமான உதவியை செய்தன. ஆனால் இன்னமும் உக்ரைன் நாட்டில் இருந்து எப்படி நாடு திரும்புவது என்று தெரியாமல் ஏராளமான மாணவர்கள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை உடனடியாக மீட்க வேண்டும்.
உதவி செய்ய வேண்டும்
தான் படிக்கும் பல்கலைக்கழகம் வருகிற 13-ந் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. மீண்டும் எப்படி மருத்துவ படிப்பை தொடர உக்ரைனுக்கு செல்வது? மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பது தெரியவில்லை. இருந்தபோதிலும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷியாவில் இந்த படிப்பை தொடருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் கூடுதல் செலவாகும். அதற்கு அரசு உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story