களை கட்டிய மீன்பிடி திருவிழா
மேலூர் அருகே பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது. கண்மாயில் இறங்கி கிராம மக்கள் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
கொட்டாம்பட்டி,
மேலூர் அருகே பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது. கண்மாயில் இறங்கி கிராம மக்கள் மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
மீன்பிடி திருவிழா
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உறங்கான்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சூரத்தூர்பட்டி கிராமத்தில் உள்ள மடைகருப்பு சுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் 80 ஏக்கர் பரப்பளவிலான கண்மாய் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையின் காரணமாகவும், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீரின் மூலமும் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து மடை கருப்பு சுவாமி கோவிலில் வேண்டுதல் நிறைவேறியவர்கள் கண்மாயில் மீன் குஞ்சுகள் வாங்கி விட்டனர். தற்போது மாசித்திருவிழா முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை கண்மாயில் உள்ள மீன்களை பொதுமக்கள் பிடித்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர் என சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு மீன்பிடித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதலே கண்மாய் கரையில் காத்திருந்தனர்.
கண்மாயில் இறங்கி மீன்பிடித்தனர்
ஊர் பெரியவர்கள் வந்து அனுமதி அளித்தவுடன் பொதுமக்கள் அனைவரும் மொத்தமாக இறங்கி கண்மாயில் ஒரே நேரத்தில் மீன்களை பிடிக்க தொடங்கினர். தாங்கள் கொண்டு வந்த வலைகள், சாக்குப்பைகள், வேட்டிகள் உள்ளிட்டவைகளால் மீன்களை உற்சாகத்துடன் பிடிக்க தொடங்கினர். இதனால் அந்த பகுதியே களை கட்டி காணப்பட்டது.
சிறிது நேரத்திலேயே கட்லாமீன், ரோகுமீன், கெளுத்திமீன், கெண்டைமீன்,விரால்மீன், குறவைமீன் உள்ளிட்ட பல வகையான மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.அவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று இறைவனுக்கு படையல் இட்டு பின்பு சமைத்து சாப்பிடுவர்.இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகளில், ‘கமகம’ மீன்குழம்பு விருந்து நடந்தது. இவ்வாறு மீன்பிடி திருவிழா நடத்தப்படுவதன் மூலம் விவசாயம் செழித்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ வழி வகுக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story