‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த சாலை
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பாலவாடியில் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. சாலையில் உள்ள ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் போது வாகனஓட்டிகள் தவறி கீழே விழுந்து காயமடையும் சம்பவமும் நடக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. சேதமடைந்த இந்த சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்பொதுமக்கள், பாலவாடி தர்மபுரி.
===
மணிக்கூண்டு சரிசெய்யப்படுமா?
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் பழமையான மணிக்கூண்டு ஒன்று உள்ளது. இது பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளதால் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மணிக்கூண்டை சரிசெய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், திருச்செங்கோடு.
==
தெருநாய்கள் தொல்லை
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா வேலகவுண்டன்புதூரை அடுத்த எஸ்.கே. நகரில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி தொல்லை கொடுக்கின்றன. இந்த தெருநாய்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி துரத்தி கடித்து வருகின்றன. இதனால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.
-பொதுமக்கள், எஸ்.கே.நகர், சேலம்.
===
பயன்பாடில்லாத குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
சேந்தமங்கலம் தாலுகா கொண்டமநாயக்கன்பட்டி கிராமம் தாதம்பட்டி சாலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தது. சேதமடைந்த காரணத்தால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்பட்டு புதிதாக கட்டப்பட்டது. ஆனால் இந்த குடிநீர் தொட்டி இதுநாள்வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக இங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். விரைவில் புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சதீஷ், கொண்டமநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம்.
===
சுகாதார சீர்கேடு
சேலம் ஸ்டேட் பேங்க் ஆபீசர் காலனி பகுதியில் குப்பை தொட்டி இல்லாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையில் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பைகளை தெரு நாய்கள் கிளறிவிடுவதால் சாலையில் சிதறி கிடக்கிறது. இதன் காரணமாக அங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
கேசவராஜ், ஸ்டேட் பேங்க் காலனி, சேலம்.
====
Related Tags :
Next Story