தேவூர் அருகே பயங்கரம்:கோவில் பூசாரி வெட்டிக்கொலை-உறவினர் போலீசில் சரண்
தேவூர் அருகே கோவில் முன்பு தூங்கி கொண்டிருந்த பூசாரி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த உறவினர் போலீசில் சரண் அடைந்தார்.
தேவூர்:
தேவூர் அருகே கோவில் முன்பு தூங்கி கொண்டிருந்த பூசாரி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த உறவினர் போலீசில் சரண் அடைந்தார்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவில் பூசாரி
சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள அரசிராமணி செட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 67). இவருக்கு மங்கம்மாள் (57) என்ற மனைவியும், சித்தநாதன் என்ற மகனும், சசிகலா என்ற மகளும் உள்ளனர். மகன், மகளுக்கு திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.
ஆனந்தன், செட்டிப்பட்டியில் சரபங்கா நதியோரம் சுடலை காளியம்மன் கோவில் கட்டி அதில் பூசாரியாக இருந்து வந்தார். மேலும் கோவிலில் பேயோட்டுதல், பில்லி சூனியம் நீக்குதல் ஆகியவையும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் இரவில் கோவில் முன்பு தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அரிவாளால் வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆனந்தன் கோவில் முன்பு கயிற்று கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். இரவு 11 மணிக்கு, அவருடைய உறவினரான அரசிராமணி தைலாங்காடு பகுதியை சேர்ந்த போர்மன்னன் என்பவர் அங்கு வந்தார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆனந்தனை சரமாரியாக வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த ஆனந்தன் கட்டிலிலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போர்மன்னன் தேவூர் போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவங்களை கூறி சரண் அடைந்தார்.
பணம் கொடுக்கல், வாங்கல்
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக சுடலை காளியம்மன் கோவிலுக்கு சென்றனர். பின்னர் படுகொலை செய்யப்பட்ட ஆனந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போர்மன்னனிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், போர்மன்னன் மனைவி பாப்பாத்தி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கிணற்றில் விழுந்து இறந்தார். பாப்பாத்தி மரணத்துக்கு ஆனந்தன் வைத்த பில்லி சூனியம் தான் காரணம் என போர்மன்னன் நினைத்து வந்தார். மேலும் உறவினர்களான போர்மன்னன், ஆனந்தன் இணைந்து தொழில் செய்து வந்தனர். அதில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனால் போர்மன்னன், பூசாரி ஆனந்தனை வெட்டிக்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கைது
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போர்மன்னனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தேவூர் அருகே கோவில் முன்பு தூங்கி கொண்டிருந்த பூசாரி, உறவினரால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story