உரிய பராமரிப்பு வழிமுறைகளை பின்பற்றி தாய், சேய் மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தல்


உரிய பராமரிப்பு வழிமுறைகளை பின்பற்றி தாய், சேய் மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 7 March 2022 2:53 AM IST (Updated: 7 March 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

உரிய பராமரிப்பு வழிமுறைகளை பின்பற்றி தாய், சேய் மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தியுள்ளார்.

சேலம்:
உரிய பராமரிப்பு வழிமுறைகளை பின்பற்றி தாய், சேய் மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தியுள்ளார்.
தணிக்கை கூட்டம்
சேலம் மாவட்ட அளவிலான மகப்பேறு மற்றும் சிசு மரண தணிக்கை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தாய் மற்றும் சிசு மரணத்தை தடுக்கும் வழிமுறைகளான உரிய கர்ப்பக்கால சேவைகள், தாய் சேய் நல பராமரிப்பு உள்ளிட்ட வழிமுறைகளை முறையாக பின்பற்றுவது, சிக்கலுள்ள கர்ப்பிணிகள் மற்றும் சிசுக்களை முறையாக கண்காணிப்பது போன்றவை குறித்து அறிவுறுத்தப்பட்டது.
தாய், சேய் மரணங்கள்
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசும்போது, ரத்தசோகை போன்ற கர்ப்பகால சிக்கலுள்ள தாய்மார்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதுடன், மூன்றாம் நிலை சிறப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு உரிய காலத்தில் பரிந்துரைக்க வேண்டும். முதல் பிரசவத்திற்கு பிறகு உரிய குடும்ப நல இடைவெளியை பின்பற்றவும், 2-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள தாய்மார்களுக்கு குடும்ப கட்டுப்பாடு முறைகளை அறிவுறுத்த வேண்டும். மேலும், உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தாய் மற்றும் சேய் மரணங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதில் சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் நளினி (சேலம்), ஜெமினி (ஆத்தூர்), தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளை சார்ந்த மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story