பவானிசாகர் அருகே வனப்பகுதியில் உள்ள தெங்குமரஹடா கிராமத்தை காலி செய்ய விவசாயிகள் மறுப்பு
பவானிசாகர் அருகே வனப்பகுதியில் உள்ள தெங்குமரஹடா கிராமத்தை காலி செய்யும் எண்ணம் இல்லை என்று கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே வனப்பகுதியில் உள்ள தெங்குமரஹடா கிராமத்தை காலி செய்யும் எண்ணம் இல்லை என்று கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.
கருத்து கேட்பு கூட்டம்
பவானிசாகரை அடுத்து உள்ள கிராமம் தெங்குமரஹடா. நீலகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட இந்த கிராமமானது முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதி ஆகும். தற்போது இந்த கிராமத்தில் 638 குடும்பங்களை சேர்ந்த 1,600 மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த கிராமம் முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் வருவதால் இங்குள்ள மக்களை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வது குறித்து கருத்து கேட்க சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குனர் நிகார் ரஞ்சன் தலைமையில் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அந்த உத்தரவில், ‘குழுவானது தெங்குமரஹடா கிராம மக்களை நேரடியாக சந்தித்து, அங்குள்ளவர்கள் வேறு இடத்துக்கு குடி வருவது குறித்து கருத்து கேட்டு, அதன் அறிக்கையை மார்ச் 10-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்,’ என தெரிவித்து இருந்தது.
நீதிமன்ற உத்தரவின்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குனர் நிகார் ரஞ்சன் தலைமையில், ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேசன், துணை இயக்குனர் அருண்குமார், சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் கிருபா சங்கர் ஆகியோரை கொண்ட குழு தெங்குமரஹடா கிராம மக்களை நேற்று சந்தித்து கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது.
உணவு பஞ்சம்
அப்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குனர் நிகார் ரஞ்சன் கூறுகையில், ‘நீதிமன்ற உத்தரவுபடி தெங்குமரஹடா கிராமத்தை விட்டு வேறு இடத்திற்கு குடிபெயர்வது குறித்து கருத்து கேட்க வந்து உள்ளோம். எனவே பொதுமக்கள் தங்களுடைய கருத்தை,’ தெரிவிக்கலாம் என்றார்.
இதைத்தொடர்ந்து தெங்குமரஹடா கிராமம் தோன்றிய வரலாறு குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேசன் விளக்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘1952-ம் ஆண்டு இந்தியாவில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டபோது தெங்குமரஹடா கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய 141 உறுப்பினர்களை கொண்ட விவசாய சங்கம் ஒன்று அமைக்கப்பட்டு இந்த நிலத்தை சமன் செய்து விவசாயம் செய்ய அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் 1957-ம் ஆண்டு மீண்டும் 5 வருடம் விவசாய உற்பத்தி செய்ய நீட்டித்து அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. மேலும் 1961-ம் ஆண்டு இந்த நிலத்தை 500 ஹெக்டேராக அதிகரித்து இதில் கூட்டுறவு சங்கம் (சொசைட்டி) சார்பாக விவசாயம் செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டது. அப்போது இந்த நிலம் தேவைப்படும் போது அரசு எடுத்துக்கொள்ளும். இதற்காக வேறு எந்த நிவாரணமும் கிடைக்காது என்ற நிபந்தனையின் அடிப்படையில் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி 1968-ம் ஆண்டு இந்த நிபந்தனையின் காரணமாக இந்த 500 ஹெக்டேர் விவசாய நிலத்துக்கு நிலவரி உள்ளிட்ட எதுவும் வசூலிப்பதை அரசு கைவிட்டது,’ என்றார்.
வேறு இடத்துக்கு இடம் பெயர மாட்டோம்
இதைத்தொடர்ந்து தெங்குமரஹடா கூட்டுறவு பண்ணை சங்கத்தின் தலைவர் போஜராஜன் கருத்து தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
1952-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான உணவு பஞ்சத்தின் காரணமாக உணவு உற்பத்திக்காக இந்த நிலம் 141 உறுப்பினர்களுக்கு அரசால் வழங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை 141 உறுப்பினர்கள் அனைவரும் தொன்றுதொட்டு வாரிசு அடிப்படையில் இன்று வரை அரசாங்கத்தின் கூட்டுறவு சட்டங்களுக்கு உட்பட்டு விவசாயம் செய்து வருகிறோம். அரசு எங்களுக்கு என்று தனி உதவி வழங்காமல் அனைத்து விவசாயிகளுக்கு வழங்கும் உதவிகளை எங்களுக்கும் வழங்கினால் இந்தியாவிலேயே சிறந்த கூட்டுறவு பண்ணை சங்கமாக மாற்றிக் காட்டுவோம். விவசாயிகளான எங்களுக்கு தெங்குமரஹடா கிராமத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயர விருப்பமில்லை.
ஆகவே எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்து எங்களுடைய விவசாய உற்பத்தியை பெருக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து தங்கள் கோரிக்கை மனுவை சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குனர் நிகார் ரஞ்சனிடம் விவசாயிகள் வழங்கினர்.
இழப்பீடு
அதே நேரம் கருத்து கேட்பு கூட்டத்தில் தெங்குமரஹடா ஊராட்சி தலைவி சுகுணா, வார்டு உறுப்பினர்கள், விவசாய தொழிலாளர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து பேசுகையில், ‘நாங்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து எங்களுடைய மூதாதையர் காலத்திலேயே விவசாய பணிகள் செய்வதற்காக தெங்குமரஹடா கிராமத்துக்கு வந்து விட்டோம். எங்களுக்கு இங்கு எந்த வசதிகளும் இல்லை. எங்கள் குழந்தைகள் மேல் படிப்பு படிப்பதற்கு வசதி இல்லை. இங்கு இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவரே போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் இறந்து விட்டார். எங்கள் வீட்டிற்கு பட்டா கூட இல்லை.
ஆகவே அரசாங்கம் எங்களுக்கு போதிய இழப்பீடு கொடுத்து வேறு இடத்தில் வீடு கட்டி கொடுத்து விவசாயம் செய்ய நிலம் கொடுத்தால் தெங்குமரஹடா கிராமத்தை விட்டு மொத்தம் உள்ள அனைவரையும் ஒரே நேரத்தில் வேறு இடத்திற்கு இடம் பெயர வைத்தால் நாங்கள் செல்ல தயாராக இருக்கிறோம்,’ என்றனர்.
நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
இதற்கு பதில் அளித்து பேசிய நீலகிரி மாவட்டம் கலெக்டர் அம்ரித் கூறுகையில், ‘நீதிமன்றம் முதல் கட்ட நடவடிக்கையாக பொதுமக்கள் கருத்தை மட்டும் கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு உள்ளது. அதன்படி இது முதல் கட்ட நடவடிக்கை தான். ஆகவே இதை மட்டும் செய்யவே நாங்கள் வந்துள்ளோம். உங்களுடைய விருப்பங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்,’ என்றார்.
கூட்டத்தில் தெங்குமரஹடா கிராம மக்கள் அனைவரும் முழுமையாக கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை எடுத்துரைத்தனர்.
Related Tags :
Next Story