ஓட்டல் வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் திண்டாட்டம்
ஓட்டல் வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் திண்டாட்டம்
வந்தாரை வாழ வைக்கும் பூமி என்று அழைக்கப்படும் திருப்பூர் அந்த பேருக்கு ஏற்றார்போல் எத்தனை லட்சம் பேர் வேலை தேடி வந்தாலும் அனைவருக்கும் வேலையை வழங்க தயாராக உள்ளது. பின்னலாடை ஏற்றுமதி தொழில் மற்றும் அதை சார்ந்துள்ள அனைத்து சிறு, குறு தொழில்களுக்கும் தொழிலாளர்கள் தேவை என்ற நிலையே எப்போதும் காணப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே தொழிலாளர்களாக இருந்து வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு இணையாக வடமாநில தொழிலாளர்கள் அனைத்து துறைகளில் பணியாளர்களாக உள்ளனர். குறிப்பாக திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஓட்டல்களில் கடந்த சில ஆண்டுகளாக வடமாநில தொழிலாளர்கள் சப்ளையர்கள், கிளீனிங் உள்பட அனைத்து வேலைகளையும் செய்து வந்தனர்.
ஓட்டலில் தொழிலாளர்்கள் பற்றாக்குறை
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில் பணிபுரிந்து வந்த பெரும்பாலான வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். தற்போது கொரோனா நீங்கி கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்ட நிலையிலும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊரில் இருந்து இன்னும் திரும்பி வந்த பாடில்லை.
இதனால் திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஓட்டல்களில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:-
ஓட்டலை மூடும் நிைல
கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வரை வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் குழுவாகவும், தனியாகவும் ஓட்டல்களில் வேலை செய்து வந்தனர். எந்த வேலை கொடுத்தாலும் சுறுசுறுப்பாக செய்து முடிக்கும் பழக்கம் வடமாநில தொழிலாளர்களுக்கு உண்டு. 3 ஆண்டுகள் கொரோனா காரணமாக அடுத்தடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திரும்பி வர யோசனை செய்கின்றனர். அவர்களுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்தவர்களை பணியமர்த்தினால் வடமாநில தொழிலாளர்களை விட 2 மடங்கு சம்பளம் கேட்கின்றனர்.
ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக ஓட்டல் தொழில் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து தொழில் செய்வது என்பது கஷ்டமான காரியம். வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நிலையிலும், அதிக சம்பளம் கொடுத்து தொழில் நடத்த முடியாத சூழலில் ஓட்டல்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளதால் மிகவும் கவலை அளிக்கிறது.
அதே நேரம் பல ஆண்டுகள் இதே தொழிலை செய்துவிட்டு திடீரென தெரியாத வேறு தொழிலை தொடங்குவது சாத்தியமில்லாத ஒன்று இவ்வாறு அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story