டாக்டர்கள், செவிலியர்கள், மாணவர்கள் பங்கேற்ற பெண்கள் ஆரோக்கியத்துக்கான நடைபயண நிகழ்ச்சி
சென்னையில் அப்பல்லோ மகளிர் ஆஸ்பத்திரி சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘பெண்கள் ஆரோக்கியத்துக்கான நடைபயணம்’ நிகழ்ச்சி நேற்று நடந்தது.
லயோலா கல்லூரி அருகில் இருந்து தொடங்கிய நடைபயணத்தை திரைப்பட இயக்குனர் ஜோஸ் பிரடெரிக், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா மற்றும் கே.சுதீப் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முக்கிய சாலை வழியாக சென்று ஷபி முகமது சாலை, ஆயிரம்விளக்கில் உள்ள ஆஸ்பத்திரி முன்பு நிறைவு பெற்றது. 3 கிலோ மீட்டர் தூரம் நடந்த நடைபயணத்தில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், திரைப்பட இயக்குனர் ரவிகுமாரின் மகள் மாலிகா ரவிகுமார் உள்ளிட்ட பெண் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், மாணவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
நிறைவு நிகழ்ச்சியில் கருவியல் மற்றும் மகப்பேறு துறையின் மூத்த டாக்டர் சுமனா மனோகர் பேசும்போது, ‘ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அல்லது பராமரிக்க தினசரி 30 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் எலும்புகளும் வலுப்படும். அதிகப்படியான உடல் கொழுப்பை குறைக்கவும், தசைகளுக்கு கூடுதல் சக்தியையும் ஆற்றலை அளிக்கவும் உதவும். உடல் பருமன் தொடர்பான புற்று நோய்கள் உள்ளிட்ட பல்வேறு அபாயத்தையும் குறைக்க முடியும். பெண்களின் அன்றாட வாழ்க்கையில் உடல் நலம் மற்றும் உடற்பயிற்சியின் பங்கை ஊக்குவிப்பதற்காகவும், நடைபயணத்தின் நன்மைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காகவும் இந்த அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது’ என்றார்.
Related Tags :
Next Story