தானேயில் பெண் குழந்தைகள் தத்தெடுப்பு அதிகரிப்பு
தானேயில் பெண் குழந்தைகளை தம்பதிகள் அதிகளவில் தத்தெடுப்பது தெரியவந்து உள்ளது.
தானே,
தானேயில் பெண் குழந்தைகளை தம்பதிகள் அதிகளவில் தத்தெடுப்பது தெரியவந்து உள்ளது.
பெண் குழந்தைகள் தத்தெடுப்பு
ஒருகாலத்தில் பெண் குழந்தையே வேண்டாம் என்ற மனநிலை அதிகமாக இருந்தது. கிராமப்புறங்களில் பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் பழக்கமும் இருந்தது. தற்போது காலம் மாறி ஆண்களும், பெண்களும் சமம் என்ற நிலை உருவாகி உள்ளது. உண்மையை சொல்லப்போனால் ஆண் குழந்தைகளை காட்டிலும், பெண் குழந்தைகள் வயதான பெற்றோரை நன்றாக கவனித்து கொள்கின்றனர். இதேபோல ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகள் பெற்றோர் மீது அதிக பாசத்தை காட்டுவதாக கூறப்படுகிறது.
இதன்காரணமாக ஆண் குழந்தைக்காக பெற்றோர் தவம் இருந்த காலம் போய், பெண் குழந்தை தான் தனக்கு பிறக்க வேண்டும் என தம்பதியினர் நினைக்கும் அளவுக்கு காலம் மாறி உள்ளது.
தானேயில்...
இதை மெய்பிக்கும் வகையில் மராட்டிய மாநிலம் தானேயில் கடந்த சில ஆண்டுகளாக பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
தானே மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மூலம் கிடைத்த தகவலின்படி கடந்த 2016-ம் ஆண்டு முதல் தானேயில் 216 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 122 குழந்தைகள், அதாவது 60 சதவீத குழந்தைகள் பெண் குழந்தைகள் என்பது தெரியவந்து உள்ளது.
ஆண் குழந்தை உள்ள போதும்...
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, "பெண் குழந்தைகள் தத்தெடுக்கும் தம்பதியின் குடும்பத்தினரிடம் விரைவில் ஒட்டிக்கொள்கின்றனர். மேலும் பெண் குழந்தைகள் வயதான காலத்தில் தங்களை பார்த்து கொள்ளும் என பலர் நம்புகின்றனர்" என்றார்.
இதேபோல ஒருசில தம்பதிகள் தங்களுக்கு ஆண் குழந்தை உள்ள போதும், பெண் குழந்தை வேண்டும் என்பதற்காக பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கின்றனர் என வந்தனா பாட்டீல் என்ற டோம்பிலியை சேர்ந்த அறக்கட்டளை துணை இயக்குனர் கூறினார்.
பிரபலங்களான ஏஜ்சலினா ஜோலி, ரவீனா தன்டன், சன்னி லியோன் போன்றவர்கள் கூட பெண் குழந்தையை தான் தத்தெடுத்து வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
------------
Related Tags :
Next Story