ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
கோத்தகிரி அருகே தார்ச்சாலை அமைத்து தரக்கோரி ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே தார்ச்சாலை அமைத்து தரக்கோரி ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாரதி நகர்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் ஓரசோலை அருகே அட்டவளை பாரதி நகர் கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அட்டவளை சாலையோரத்தில் வசித்து வந்தனர். அப்போது குடியிருப்புகள் மீது அடிக்கடி மரங்கள் விழுந்து விபத்து ஏற்பட்டு வந்தது.
இதனால் பாரதி நகர் கிராமத்தில் வருவாய்த்துறை மூலம் மாற்று இடம் வழங்கப்பட்டது. அது செங்குத்தான பகுதி என்பதால், நடைபாதை வசதி சரிவர இல்லை. இதையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், தனக்கு சொந்தமான தேயிலை தோட்டம் வழியாக கான்கிரீட் நடைபாதை அமைக்க நிலம் வழங்கினார். அந்த நிலத்தில் ஊராட்சி சார்பில் நடைபாதை அமைத்து, பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
முற்றுகை போராட்டம்
எனினும் தார்ச்சாலை வசதி இல்லாததால், அந்த கிராமத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள சிரமம் இருந்தது. குறிப்பாக அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட வந்து செல்ல முடியாததால், நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் நிலை உள்ளது.
இந்த நிலையில் தார்ச்சாலை அமைத்து தரக்கோரி பாரதி நகரை சேர்ந்த நிர்வாகிகள் லோகேஸ்வரன் மற்றும் சுந்தர பால் ஆகியோர் தலைமையில் பெண்கள் உள்பட 30 பேர் இன்று மதியம் 12 மணியளவில் கோத்தகிரி-குன்னூர் சாலையில் வெஸ்ட்புரூக் பகுதியில் உள்ள நடுஹட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதை அறிந்த கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், நடுஹட்டி ஊராட்சி தலைவர் அரக்கம்பை கிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் பாரதிநகருக்கு செல்லும் நடைபாதையை தார்ச்சாலையாக மாற்ற தேவைப்படும் நிலம் தனியாருக்கு சொந்தமானது என்பதால், வனத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சம்பந்தபட்ட நிலத்தை உரிமையாளரிடம் இருந்து பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று பாரதி நகர் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story